Skip to main content

“கொடுத்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது” - துரை வைகோ எம்.பி. பேச்சு!

Published on 02/03/2025 | Edited on 02/03/2025

 

பெரம்பலூரில் ஒன்றிய பாஜக அரசைக் கண்டித்து மதிமுகவின் முதன்மைச் செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான துரை வைகோ தலைமையில் தலைமையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் இன்று (02.03.2025) நடைபெற்றது. அப்போது விவசாய உற்பத்தி பொருட்களுக்குக் குறைந்தபட்ச ஆதார விலையை நிர்ணயம் செய்ய வலியுறுத்தப்பட்டது. அதற்கு உரியச் சட்ட பாதுகாப்பை வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது. பயிர்க் காப்பீட்டுத் திட்டத்தின் விதிமுறைகளைக் கடுமையாக்கியதற்குக் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. நெல் கொள்முதலில் நெல்லின் ஈரப்பதத்தை 17% இருந்து 22% உயர்த்திடவும், 100 நாள் வேலைத் திட்டத்திற்கான போதிய நிதியை உடனடியாக வழங்கிடவும் வலியுறுத்தப்பட்டது.  மேலும் மக்காச்சோளத்திற்கு விதிக்கப்பட்ட 1% செஸ்வரியை நீக்கி விவசாயிகளின் வாழ்வாதாரத்தைக் காக்கத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டது.

இந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில்  கலந்து கொண்ட துரை வைகோ எம்.பி. பேசுகையில், “உலகப் பொதுமறையான திருக்குறள் உலகின் பல நூறு மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. குறிப்பாக ஹிந்தியிலும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. இதை ஏன் நான் இங்குக் குறிப்பிடுகிறேன் என்றால், தமிழ்நாட்டிற்கு வரும் போதெல்லாம் திருக்குறளை மேற்கோள் காட்டாமலும், திருவள்ளுவரைப் பற்றிப் பேசாமலும் தமது தமிழ்நாடு சுற்றுப்பயணத்தை முடிப்பதே இல்லை பிரதமர் மோடி. ஆனால் பிரதமர் மோடி ஒரு தரம் கூட ஹிந்தியில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள திருக்குறளை எடுத்துப் புரட்டிக் கூட பார்த்து இருக்க மாட்டார் என்பது என்னுடைய ஆணித்தரமான கருத்து. உண்மையிலேயே அவர் படித்திருந்தால், விவசாயத்தின் சிறப்பை விவசாயிகளின் மாண்பைப் புரிந்திருப்பார்.

அப்படிப் புரிந்திருந்தால், 15 லட்சம் கோடி கார்ப்பரேட் கடனை தள்ளுபடி செய்ததைப் போல ரத்தத்தை வேர்வையாகச் சிந்தி உலகிற்கு உணவளிக்கும் விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்திருப்பாரா இல்லையா?. ஏன் ஒன்றிய மோடி அரசு விவசாயிகளின் கடனை தள்ளுபடி செய்யவில்லை?. இதே ஒன்றிய மோடி அரசு கொண்டு வந்த விவசாயிகளுக்கு எதிரான மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து 2020ஆம் ஆண்டு டெல்லியைப் பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் முற்றுகையிட்டனர். கடும் குளிரிலும் சுட்டெரிக்கும் வெயிலிலும் அடை மழையிலும் ஒரு வருடத்திற்கு மேலாக இடைவிடாமல் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் 700 விவசாயிகள் தங்கள் உயிரைப் பறிகொடுத்தனர். இறுதியில் அந்த தன்னலமற்ற ஏர் பிடிக்கும் விவசாயிகளின் போராட்டத்திற்கு ஒன்றிய அரசு அடிபணிந்தது. மூன்று வேளாண் சட்டங்களை வாபஸ் பெற்றது. விவசாயிகளின் குறைந்தபட்ச கோரிக்கைகளை நிறைவேற்றித் தருவதாக வாக்குறுதி அளித்தது. ஆனால் அப்போது கொடுத்த வாக்குறுதிகளை மோடி அரசு நிறைவேற்றத் தவறிவிட்டது” எனப் பேசினார். 

சார்ந்த செய்திகள்