மகாராஷ்டிராவில் மொத்தமுள்ள 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் கடந்த 20ஆம் தேதி (20.11.2024) ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. ஜார்க்கண்டில் மொத்தமுள்ள 81 தொகுதிகளுக்கு நவம்பர் 13 மற்றும் 20ஆகிய தேதிகளில் 2 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெற்றது. அதன் தொடர்ச்சியாக இந்த இரு மாநிலங்களில் பதிவான வாக்குகள் இன்று (23.11.2024) காலை 8 மணி முதல் எண்ணப்பட்டு வருகின்றன. அதோடு உத்தரப்பிரதேசம், அசாம், சத்தீஸ்கர், குஜராத், கர்நாடகா, பஞ்சாப் உள்ளிட்ட 14 மாநிலங்களில் 48 சட்டப்பேரவை தொகுதிக்காக நடைபெற்ற இடைத்தேர்தலுக்கான வாக்குகளும் எண்ணப்பட்டு வருகின்றன.
மேலும் கேரளாவின் வயநாடு, மகாராஷ்டிராவின் நாந்தேட் ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு நடந்து முடிந்த இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளும் இன்று எண்ணப்படுகின்றன. மகாராஷ்டிராவில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 145 ஆகும். இந்நிலையில் மதியம் 2.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 221 இடங்களிலும், காங்கிரஸ் கூட்டணி 57 இடங்களிலும், மற்றவை 10 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. ஜார்க்கண்டில் பெரும்பான்மைக்குத் தேவையான இடங்கள் 41 ஆகும். இத்தகைய சூழலில் மதியம் 2.30 மணி நிலவரப்படி பாஜக கூட்டணி 29 இடங்களிலும், ஜெ.எம்.எம். தலைமையிலான கூட்டணி 51 இடங்களிலும் முன்னிலை வகிக்கின்றன. மற்றவை ஒரு இடத்திலும் முன்னிலை வகிக்கின்றன.
அதே சமயம் மதியம் 2.30 மணி நிலவரப்படி நிலவரப்படி வயநாடு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் பிரியங்கா காந்தி சுமார் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் பெற்று முன்னிலை வகித்து வருகிறார். 2வது இடத்தில் உள்ள இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் சத்யன் 2 லட்சத்து 4 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்றுள்ளார். 3வது இடத்தில் உள்ள பாஜக வேட்பாளர் ஒரு லட்சத்து 7 ஆயிரம் வாக்குகளை மட்டுமே பெற்றுள்ளார். இந்நிலையில் வயநாடு தொகுதியில் வெற்றி முகத்தில் உள்ள பிரியங்கா காந்திக்கு திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாகச் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசுகையில், “மிகவும் துல்லியமாகவும், தைரியமாகவும், தெளிவாகவும் ஆணித்தரமாகவும் பேசக்கூடியவராகப் பிரியங்கா காந்தி எதிர்க்கட்சி வரிசையில் இணைவதற்கு மகிழ்ச்சி. அவரை மிக்க மன மகிழ்ச்சியோடு வரவேற்கிறேன். அவருக்கு வாழ்த்துகளையும், பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். ஜனநாயக நாட்டில், தேர்தலில் மக்கள் அளிக்கும் தீர்ப்பைத் தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். மக்கள் இரண்டு மாநிலங்களில் வெவ்வேறு வெற்றிகளைக் கொடுத்திருக்கிறார்கள்” எனப் பேசினார்.