
தொடர்ந்து வெற்றிப்படங்கள் கொடுக்க தடுமாறி வரும் ஜீவா இந்த முறை ஒரு பேய் பேண்டஸி திரைப்படம் மூலம் விட்ட இடத்தை படிக்க முயற்சி செய்திருக்கிறார். அதில் அவர் வெற்றி பெற்றாரா, இல்லையா?
சினிமா கலை இயக்குநராக இருக்கும் ஜீவா தனது கை காசு போட்டு பாண்டிச்சேரியில் ஒரு மிகப்பெரிய அரண்மனையில் செட் அமைத்து வேலை செய்து வரும் வேளையில் அந்த படப்பிடிப்பு சில பல பிரச்சனைகளால் நிறுத்தப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அவர் அந்த செட்டை அப்படியே ஸ்கேரி ஹவுஸ் ஆக மாற்றி அதற்கு டிக்கெட் போட்டு பார்வையாளர்களை உள்ளே அழைத்து அதன் மூலம் கல்லாகட்ட முடிவெடுக்கிறார். இவரது ஸ்கேரி ஹவுஸ்க்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைக்கிறது.

அந்த ஸ்கேரி ஹவுஸில் ஒரு பழைய பியானோ ஒன்று இருக்கிறது. அதை எடுத்து அதையும் பார்வைக்கு வைக்கின்றனர். அப்பொழுது அதனுள் இருக்கும் பேய் வெளியே வருகிறது. இதைத் தொடர்ந்து அந்த ஸ்கேரி ஹவுஸ்க்குள் வரும் நபர்களையும் அந்த பேய் துன்புறுத்த ஆரம்பிக்க போகப் போக அந்த ஸ்கேரி ஹவுஸுக்கும் அந்த பேய்க்கும் என்ன சம்பந்தம்? அங்கு இருக்கும் பேய்கள் ஏன் இப்படி செய்கின்றன? இதிலிருந்து ஜீவா மீண்டாரா, இல்லையா? என்பதே படத்தின் மீதி கதை.
சித்த மருத்துவத்தையும் அதனுள் இருக்கும் முக்கியத்துவத்தையும் வைத்துக்கொண்டு ஒரு 1940களில் நடக்கும் கதையாக இந்த ஹாரர் திரைப்படம் அகத்தியா விரிகிறது. பாடலாசிரியராக இருந்து இயக்குநராக மாறியிருக்கும் பா.விஜய் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பல்வேறு பேய் படங்களின் கலவைகளை உள்ளடக்கி அதில் சித்த மருத்துவம், பேய்களின் அட்டகாசம், ஃபேண்டஸி, காமெடி என கொஞ்சம் சேர்த்து ஒரு பார்சலில் கட்டி குடும்பங்கள் கொண்டாடும் பேய் படமாக இந்த அகத்தியா படத்தை கொடுத்திருக்கிறார்.

இந்த படத்தின் கதையும் திரை கதையும் நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பல்வேறு படங்களின் சாயல்களில் இருந்தாலும் எந்த ஒரு இடத்திலும் போர் அடிக்காமல் பார்ப்பவர்களுக்கு என்டர்டைன்மெண்டாக இருப்பது இப்படத்திற்கு பிளஸ். அடுத்தடுத்த காட்சிகள் யூகிக்கும்படி அமைந்திருந்தாலும் படத்தில் விறுவிறுப்பு குறையாமல் காட்சிகள் நகர்வதும் பேய்களின் அட்டகாசத்தை காட்டுவதும் அதே சமயம் பிளாஷ்பேக் சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டிருப்பதும் படத்திற்கு பிளஸ் ஆக அமைந்து படத்தையும் கரை சேர்க்க உதவி இருக்கிறது.
நாயகன் ஜீவா வழக்கம்போல் தனது வழக்கமான நடிப்பையே இப்படத்திலும் கொடுத்திருக்கிறார். அவரிடம் நல்ல திறமைகள் இருக்கின்றது. அதை இயக்குநர்கள் நன்றாக பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஆனால் ஏனோ இத்தனை வருட காலமாக அவரிடம் இருந்து ஒரே மாதிரியான நடிப்பையே இயக்குநர்கள் வாங்கிக் கொண்டிருப்பது அவருக்கும் சரி படம் பார்ப்பவர்களுக்கும் சரி ஏதோ ஒரு வகையில் சலிப்பை ஏற்படுத்துவது வாடிக்கையாகவே இருக்கிறது. இந்த படத்திலும் அதே போன்று ஒரு நடிப்பை கொடுத்திருக்கிறார். ஆனால் அவரது நடிப்பு இந்த படத்திற்கு எந்த வகையிலும் பாதகமாக அமையவில்லை. வழக்கமான நாயகியாக வழக்கமான நடிப்பை கொடுத்துவிட்டு சென்று இருக்கிறார் நடிகை ராஷி கண்ணா.

படத்தின் இன்னொரு நாயகனாக வரும் அர்ஜுன் தனது அனைத்து காட்சிகள் மூலம் ரசிகர்களிடம் கைதட்டல்கள் பெறுகிறார். பிளாஷ்பேக் காட்சிகளில் சிறப்பாக நடித்து இறுதி கட்ட காட்சிகளில் வி.எஃப்.எக்ஸ் மூலம் தோன்றி அதகளப்படுத்தி இருக்கிறார். இவருக்கும் வெள்ளைக்காரர்களுக்குமான கெமிஸ்ட்ரி சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு இருக்கிறது. வில்லனாக வரும் வெளிநாட்டு நடிகர் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். இவருடன் நடித்திருக்கும் மற்ற நடிகர்களும் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். முக்கிய கதாபாத்திரத்தில் வரும் சார்லி, ரோகினி, சாரா, ரெடின் கிங்ஸ்லி, ராதாரவி உட்பட பலர் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.
யுவன் சங்கர் ராஜா இசையில் பாடல்களை காட்டிலும் பின்னணி இசை சிறப்பாக அமைந்திருக்கிறது. குறிப்பாக பிளாஷ்பேக் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார். தீபக் குமார் ஒளிப்பதிவில் பிளாஷ்பேக் மற்றும் அரண்மனை சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அதுவும் இறுதிக்கட்ட காட்சிகளில் வரும் அனிமேஷன் காட்சிகளுக்கு இவரின் உழைப்பு நன்றாக தெரிகிறது.
நாம் ஏற்கனவே பார்த்து பழகிய பழைய ஹாரர் திரைப்படங்களின் கலவையாகவே இப்படம் உருவாகியிருந்தாலும் பார்ப்பவர்களுக்கு எந்த ஒரு இடத்திலும் பெரும்பாலும் தொய்வில்லாமல் இருந்து என்டர்டைன்மெண்டாக இருப்பது இப்படத்திற்கு பிளஸ் ஆக அமைந்திருக்கிறது.
அகத்தியா - நம்பலாம்!