
சூழல் முதல் பாகம் வெப் சீரிஸ் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. அதனை உருவாக்கிய புஷ்கர் - காயத்ரி கூட்டணி தற்பொழுது நாயகன் கதிர் மற்றும் நாயகி ஐஸ்வர்யா ராஜேஷ் மட்டும் முதல் பாகத்திலிருந்து அப்படியே எடுத்துக் கொண்டு இந்த இரண்டாம் பாகத்தில் வைத்து புதியதாக மற்றும் ஒரு மர்டர் மிஸ்டரி கதையை உருவாக்கியிருக்கின்றனர். இந்த சூழல் 2 முதல் பாகத்தை போலவே ரசிகர்களை ஈர்த்ததா, இல்லையா?
முதல் பாகத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் குற்றம் செய்தவரை துப்பாக்கியால் சுட்டு விடும் இடத்திலிருந்து வெப் சீரிஸ் முடியும். இந்த பாகத்தில் இந்த கொலை குற்றத்துக்காக ஜெயிலில் ஐஸ்வர்யா ராஜேஷ் இருப்பது போன்று வெப் சீரிஸ் ஆரம்பிக்கிறது. இந்த வழக்கை பொதுநல வழக்கறிஞர் லால் கையில் எடுத்து ஐஸ்வர்யா ராஜேஷுக்கு நியாயம் கிடைக்க போராடுகிறார். போலீஸ் அதிகாரியான கதிரும் அவருடன் துணை நிற்கிறார். இது இப்படி இருக்க மர்மமான முறையில் அந்த வழக்கறிஞர் லால் கொலை செய்யப்பட்டு கிடக்கிறார். இந்த கொலையை நாங்கள்தான் செய்தோம் என எட்டு பெண்கள் ஒவ்வொரு ஊரிலும் இருக்கும் போலீஸ் ஸ்டேஷனில் சரணடைகின்றனர். இதனால் இந்த கொலை கேஸ் மிகவும் முக்கியமான கேஸாக மாறுகிறது. இதை துப்பு துலுக்க கதிர் நியமிக்கப்படுகிறார். இந்த கொலையை செய்தது யார்? இந்த கொலைக்கான மோட்டிவ் என்ன? இது கொலையா அல்லது தற்கொலையா? போன்ற கேள்விகளுக்கு விடையாக இந்த சூழல் 2 அமைந்திருக்கிறது.

வழக்கம்போல் ஒரு கொலை அந்த கொலையை எப்படி கண்டுபிடிக்கிறார்கள்? கொலையாளிகளை எப்படி சுற்றி வளைக்கிறார்கள்? கொலை செய்தது யார் என்ற உண்மையை வெளி உலகத்திற்கு எப்படி கொண்டு வருகிறார்கள்? என்ற வழக்கமான மர்டர் மிஸ்டரி படங்களில் வரும் திருப்புமுனைகளை இந்த வெப் சீரிஸில் வைத்துக்கொண்டு அதன் மூலம் விறுவிறுப்பான திரைக்கதை அமைத்து ரசிக்க வைத்திருக்கின்றனர் படக்குழுவினர். மொத்தம் எட்டு எபிசோடுகளாக விரியும் இதில் ஒவ்வொரு எபிசோடுகளின் முடிவிலும் ஒவ்வொரு டிவிஸ்ட்களை வைத்து அடுத்தடுத்த எபிசோடுகளை எதிர்பார்க்கும் டெம்ட்டேஷனை உருவாக்கி போகப் போக கொலையாளி யார் என்பதை விறுவிறுப்பாக வெளிச்சத்திற்கு கொண்டு வந்திருக்கின்றனர். ஆனால் முதல் பாகத்தில் இருந்த விறுவிறுப்பும் பரபரப்பும் இந்த இரண்டாம் பாகத்தில் சற்று மிஸ்ஸிங். கதை ஆரம்பித்து போகப்போக ஆமை வேகத்தில் நகர்ந்து 4ல் இருந்து 5 மணி நேரம் சீரிஸை இழுக்க வேண்டுமே என்பது போல் காட்சிகளை உருவாக்கி மெதுவாக அதை நகர்த்துவது அயற்சியை கொடுப்பதை தவிர்க்க முடியவில்லை.
அதேபோல் அடுத்தடுத்து என்ன என்பதை பல இடங்களில் யூகிக்கும்படி திரைக்கதை அமைத்திருப்பதும் சற்றே மைனஸ் ஆக அமைந்திருக்கிறது. இருந்தும் ஒரு நான்கு, ஐந்து எபிசோடுகள் கடந்த பிறகு விறுவிறுப்பு ஆரம்பிக்கும் திரைக்கதை போகப்போக பரபரப்பாக சென்று இறுதிக்கட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டு ஒரு மர்டர் மிஸ்டரி கதைக்கு என்ன வேண்டுமோ அந்த மாதிரியான திருப்புமுனைகள் சிறப்பாக அமைந்து நிறைவாக முடிந்திருக்கிறது. திருப்திகரமான காட்சிகள் ஆங்காங்கே படம் முழுவதும் படர்ந்து இருந்தாலும் சம்பந்தமில்லாத காட்சிகள் சீரிஸில் நிறைந்து இருப்பதும் ஆங்காங்கே சோர்வை கொடுக்கிறது. அவையெல்லாம் தவிர்த்து விட்டு பார்க்கும் பட்சத்தில் இந்த சுழல் 2 வெப் சீரிஸ் நல்ல ஒரு பொழுதுபோக்கு வெப் சீரிஸ் ஆக மாற முயற்சி செய்திருக்கிறது.

நாயகன் கதிர் ஜஸ்ட் லைக் தட் இன்வெஸ்டிகேஷன் செய்யும் போலீஸ் அதிகாரியாக சிறப்பாக நடித்திருக்கிறார். எந்தெந்த காட்சிக்கு எவ்வளவு எக்ஸ்பிரஷன் தேவையோ அதை சிறப்பாகவே கொடுத்திருக்கிறார். நாயகியாக வரும் ஐஸ்வர்யா ராஜேஷ் சீரிஸ் முழுவதும் ஜெயிலிலேயே இருக்கிறார். அவருக்கு கொடுக்கப்பட்ட வேலையை சிறப்பாக செய்திருக்கிறார். முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் 8 பெண்கள் அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர். இவர்களுக்கும் கவிக்குமான தொடர்பு சிறப்பாக பின்னி பிணைந்து இருக்கின்றன. கெஸ்ட் ரோலில் வரும் கயல் சந்திரன் மற்றும் மகிமா நம்பியார் கதைக்கு முக்கியமான பங்களிப்பை கொடுத்துவிட்டு சென்று இருக்கின்றனர். வக்கீலாக வரும் லால் சிறிது நேரமே வந்தாலும் மனதில் பதிகிறார். மற்றபடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அனைத்து நடிகர்களுமே அவரவர் வேலையை சிறப்பாக செய்து கதைக்கு வலு சேர்த்து இருக்கின்றனர்.
ஆபிரகாம் ஜோசப் ஒளிப்பதிவில் ஒவ்வொரு திருப்புமுனை ஏற்படும் காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சூழல் முதல் பாகத்தில் எப்படி ஒரு அனுபவம் நமக்கு ஏற்பட்டதோ அதேபோன்று ஒரு அனுபவத்தை தன் ஒளிப்பதிவின் மூலம் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் ஆபிரகாம் ஜோசப். சாம் சி.எஸ். இசையில் வழக்கம் போல் காதுகளை கிழிக்கும் சத்தமான இசையை இந்த வெப் சீரிஸுக்கும் கொடுத்திருக்கிறார். அவை சில இடங்களில் மட்டும் ரசிக்கும்படி இருந்தாலும் பல இடங்களில் வழக்கம்போல் இரைச்சலை கொடுத்திருக்கிறது.

சூழல் முதல் பாகம் கொடுத்த உணர்வை இந்த இரண்டாம் பாகம் கொடுக்க தவறினாலும் இந்த வெப் சீரிஸ் ஆரம்பித்து இரண்டாம் பாதியில் இருந்து முதல் பாகம் கொடுத்த உணர்வை கொடுக்க முயற்சி செய்து இருப்பது இந்த வெப் சீரிஸின் வெற்றியாக பார்க்கப்படுகிறது. அந்த இரண்டாம் பாதியில் கொடுத்த விறுவிறுப்பு இந்த வெப் சீரிஸை கரை சேர்க்க உதவி இருக்கிறது.
சூழல் 2 - மற்றும் ஒரு மர்டர் மிஸ்டரி!