
தமிழகத்தின் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் தேனி மாவட்டம் பெரியகுளத்தில் இன்று (02.03.2025) நடைபெற்றது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி கலந்துகொண்டார். அப்போது அவர் பேசுகையில், “முதல்வர் மு.க .ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததில் இருந்து திராவிட மடல் அரசு என்று பேசிக் கொண்டிருக்கிறார். இது திராவிட மடல் அரசு அரசு அல்ல. ஸ்டாலின் மாடல் அரசு. இந்த அரசை உற்று நோக்கிப் பார்த்தால், இந்த அரசு ஆட்சிக்கு வந்த ஒரே வருடத்தில் எச்சரிக்கை விடுத்தேன். தொலைக்காட்சி வாயிலாகவும், பத்திரிக்கையின் வாயிலாகவும், சட்டமன்றத்திலும், அறிக்கையின் வாயிலாகவும் வெளிப்படுத்தினேன்.
தமிழகம் முழுவதும் போதைப் பொருட்கள் விற்பனை அதிகமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அதனைத் தடுத்து நிறுத்துங்கள். இல்லாவிட்டால் தமிழகத்தில் இருக்கின்ற இளைஞர்கள் மாணவர்கள் கடுமையாகப் போதைக்கு அடிமையாவார்கள் என்று சொன்னேன். அதனை அரசு பொருட்படுத்தவில்லை. முதல்வர் மு.க. ஸ்டாலின் பேசுகிறார், ‘போதைக்கு அடிமையாகாதே’ என்று தொலைக்காட்சியிலே இன்றைக்கு அறிவிப்பு வெளியிட்டுக் கொண்டிருக்கிறார். கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன்பாகவே, ‘தமிழகத்தில் போதை நடமாட்டம் அதிகமாக இருக்கிறது. இரும்புக் கரம் கொண்டு அடக்குங்கள். போதைப் பொருள் நடமாட்டத்தைத் தடுத்து நிறுத்துங்கள்’ என்று நான் எச்சரிக்கை விடுத்தேன். அதைக் கண்டு கொள்ளவில்லை.
இன்று எங்கே பார்த்தாலும் போதைக்கு அடிமையாகி கஞ்சாவுக்கு அடிமையாகி பல்வேறு குற்றச் சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. திருட்டு, வழிப்பறி, பாலியல் வன்கொடுமை இது எல்லாம் போதை கஞ்சா போன்றவற்றால் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. கொலை நடைபெறாத நாளே இல்லை. பாலியல் வன்கொடுமை தொடர் கதையாக இருக்கின்றன. தொலைக்காட்சி திறந்தாலும் சரி பத்திரிக்கையைப் புரட்டினாலும் சரி அதில் வருவதெல்லாம் நெஞ்சைப் பதறச் செய்கிறது. எங்கே பார்த்தாலும் பாலியல் வன்கொடுமை. சிறுமி முதல் மூதாட்டி வரை பாலியல் வன்கொடுமை செய்யப்படுகிறார்கள். பள்ளியிலே படிக்கின்ற சிறுமிகளுக்குப் பாதுகாப்பில்லை” எனப் பேசினார்.