
அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை முதல்வர் இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவரும், அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இது குறித்து எடப்பாடி பழனிசாமி தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது, ‘திண்டுக்கல் சிறுமலையில் கண்காணிப்பு கோபுரம் அருகே மர்மப்பொருள் வெடித்து ஒருவர் இறந்து உள்ளதாக வரும் செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது. என்ஐஏ (NIA), ஏடிஎஸ் (ATS) உள்ளிட்ட அமைப்புகள் விசாரித்து வரும் நிலையில், பேட்டரி வயர் மற்றும் வெடி பொருட்கள் உள்ளதால் பயங்கரவாத தாக்குதல் நடத்த திட்டமிடப்பட்டதா என்ற சந்தேகம் நிலவுவதாக செய்திகள் வருகின்றன.
ஏற்கனவே ஐ.எஸ்.ஐ.எஸ். அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதி சென்னையில் என்ஐஏ வால் கைது செய்யப்பட்ட நிலையில், ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு என்ற நிலையைத் தாண்டி, பயங்கரவாதம் தலைதூக்கும் அளவிற்கு மக்களின் பாதுகாப்பு முற்றிலுமாக சீர்குலைந்து இருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாட்டின் பாதுகாப்பை கருத்தில் கொள்ளாமல் காவல் துறையை தன்னகத்தே வைத்திருக்கும் முதல்வர் ஸ்டாலினோ, தினம் ஒரு வீடியோ சூட்டிங்கில் பிஸியாக உள்ளார். நாடக வீடியோக்கள் மீதான நாட்டத்தை குறைத்து கொண்டு, தமிழ்நாடும் நம் மக்களும் நலமாகவும் பாதுகாப்பாகவும் இருக்க வேண்டுமென்று உணர்வோடு, முதல்வர் அடிக்கடி சொல்லி காட்டுகின்ற அந்த இரும்புக்கரத்தை இப்போதாவது பயன்படுத்தி செயல்பட வேண்டும்” என்று குறிப்பிட்டுள்ளார்.