தமிழ்நாட்டில் கரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கத்தால் பள்ளிகள், கல்லூரிகள் திறக்க முடியாத நிலை தொடர்கின்றது. இந்நிலையில், தனியார் பள்ளிகளும், மழலையர் பள்ளி முதல் மேல்நிலை பள்ளிகள் வரையும், கல்லூரிகளும் இணைய வழியாக பாடங்களை நடத்தி வருகின்றன.
'இந்த இணைய வழி கல்வி ஆபத்தானது' என எச்சரிக்கும் த.மா.கா. இளைஞரணி தலைவர் யுவராஜா, "மழலையர் பள்ளி தொடங்கி, பள்ளிக் கல்வி இறுதி ஆண்டு வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழி கற்பித்தல் என்பது நடைமுறையில் பல்வேறு சிக்கல்களை சந்திக்கின்ற நிலை இருக்கிறது.
தமிழ்நாட்டில் உள்ள 1.31 கோடி மாணவர்களில், 60 சதவீதம் பேர் கிராமப்பகுதிகளில் இருக்கிறார்கள். இணையவழிக் கல்விக்குத் தேவையான கணினி, மடிக்கணினி, 'ஸ்மார்ட் போன்' போன்றவை கிராமப்புற மாணவர்களிடம் இல்லை. இணையதள வசதிகள், 'வை-ஃபை' மற்றும் 'பிராட்பேண்ட்' வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் இல்லை. குறிப்பாகக் கிராமங்களில் இந்த வசதிகள் கிடைப்பதே மிகவும் அரிது.
தேசிய மாதிரி ஆய்வு அலுவலகம் (என் எஸ் எஸ் ஓ) வெளியிட்டுள்ள 2017-18 அறிக்கையில், 'கிராமப்புறங்களில் உள்ள 4.4 சதவீத வீடுகளிலும், நகர்ப்புறங்களில் 23.4 சதவீத வீடுகளிலும் மட்டுமே கணினிகள் உள்ளன என்றும், 'கிராமப்புறங்களில் 14.9 சதவீதம் பேருக்கும், நகர்ப்புறங்களில் 42 சதவீதம் பேருக்கும் மட்டுமே இணையதள வசதி இருக்கிறது என்றும் கூறப்பட்டுள்ளது.
மேலும், 'மடிக்கணினிகளை 11 சதவீதம் பேரும், ஸ்மார்ட் போனை 24 சதவீதம் பேரும் மட்டுமே பயன்படுத்துகிறார்கள்' என்றும் அந்த அறிக்கை சுட்டிக் காட்டியுள்ளது. அடிப்படை உட்கட்டமைப்பே இல்லாத நேரத்தில், இணையவழிக் கல்வி ஆபத்தானது.
தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிமாணவர்களுக்கு தேவையான மடிக்கணினி, அல்லது 'ஸ்மார்ட் போன்' இணையதள வசதிகள், 'வை-ஃபை' மற்றும் 'பிராட்பேண்ட்' வசதிகளும் அனைத்துப் பகுதிகளிலும் கிடைக்க அரசு உடனே ஏற்பாடு செய்யவேண்டும்.
இணையவழி கற்றல் வழக்கமான வகுப்புகளில் கற்கும் அனுபவத்தை ஒருபோதும் தந்துவிடாது. இணைய வழி கல்வி தொடரும் பட்சத்தில் 5 முதல் 9 வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழியில் 3 மணி நேரமும், 10 முதல் 12 வரை பயிலும் மாணவர்களுக்கு இணைய வழியில் 4 மணி நேரமும் கற்பிக்கலாம்" என சுட்டிக்காட்டியுள்ளார்.