அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தைச் சேர்ந்த டிடிவி ஆதரவு எம்எல்ஏக்கள் 18பேரை சபாநாயகர் தனபால் தகுதிநீக்கம் செய்தது சரிதான் என உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியதை தொடர்ந்து காலியாக உள்ள 18 தொகுதிகளோடு சேர்ந்து 20 தொகுதிகளுக்கு கூடிய விரைவில் தேர்தல் கமிஷன் இடைத்தேர்தலையும் அறிவிக்க இருந்தது. இந்த நிலையில் திடீரென திருவாரூர் இடைத்தேர்தலுக்கு மட்டும் ஜனவரி தேர்தல் நடத்த தேர்தல் கமிசன் உத்தரவிட்டுள்ளதைத்தொடர்ந்து திருவாரூரில் தேர்தல் பணி களைகட்ட தொடங்கி இருக்கிறது. ஆனால் 18 தொகுதிகளுக்கு கோர்ட்டில் மேல்முறையீடு செய்ய இம்மாதம் கடைசி வரை காலஅவகாசம் இருப்பதால் அதற்கான தேர்தலை தேர்தல் கமிசன் அறிவிக்க காலதாமதம் ஏற்படுத்தி வருகிறது. அதோடு திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலும் கோர்ட்டில் நிலுவையில் உள்ளது.
கதிர்காமு
இந்த நிலையில் தான் அரசியல் கட்சிகுள்ளேயே சீட்டுக்கான போட்டிகளும் தொடங்கி விட்டன. துணை முதல்வர் ஓபிஎஸ்-சின் சொந்த ஊரான பெரியகுளம் தனி தொகுதியில் தகுதி நீக்கம் செய்யப்பட்ட டிடிவி ஆதரவாளரான டாக்டர் கதிர்காமு மீண்டும் அதிமுகவில் அல்லது அம்மா மக்கள் முன்னேற்ற கழகமான டிடிவி கட்சி சார்பில் களம் இறங்க இருக்கிறார். அந்த கதிர்காமுக்கு சீட் வாங்கி கொடுத்து வெற்றிபெற வைத்ததே ஓபிஎஸ் தான். அப்படி இருந்தும் கூட டிடிவி அணியில் இருந்துகொண்டு தங்கதமிழ்செல்வனுடன் சேர்ந்து மாவட்டத்தில் ஓபிஎஸ்க்கு எதிராக அரசியல் பண்ணிவருகிறார்.
தவமணி
அப்படிப் பட்ட கதிர்காமை இந்த தேர்தலில் ஓரம் கட்ட வேண்டும் என்ற குறிக்கோளுடன் தான் ஒபிஎஸ் இருந்து வருகிறார். அதனால் ஓபிஎஸ்சின் மகன் ரவீந்திரநாத்தின் தீவிர ஆதவாளரான எம்.ஜி.ஆர். மன்ற மாவட்ட துணை செயலாளரான வக்கீல் தவமணியை களத்தில் இறக்க ஓபிஎஸ்சும், ரவீந்திரநாத்தும் தயாராகி வருகிறார்கள் இந்த வக்கீல் தவமணி கடந்த இரண்டு முறை தேர்தலின் போது சீட் கேட்டு நேர்காணலில் கலந்து கொண்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது. அதோடு ஓபிஎஸ்-சின் தீவிர ஆதரவாளரான தென்கரை முன்னாள் சேர்மன் பாப்பா இல.முருகன், கள்ளுப்பட்டி சிவக்குமார், வீரபாண்டி பேரூராட்சியின் முன்னாள் சேர்மன் வீரமணி, பாண்டியராஜன், அருள்குமார், முருகன் உள்பட மாவட்ட பொறுப்பில் உள்ள 19 ர.ர.க்கள் சீட்டுக்காக ஓபிஎஸ் சிடம் மோதி வருகிறார்கள்.
பாப்பா இலமுருகன்
இருந்தாலும் வக்கீல் தவமணி அல்லது பாப்பா இலமுருகன் இருவரில் ஒருவருக்கு தான் ஓபிஎஸ் சீட் கொடுக்க வாய்ப்பு இருக்கிறது என்ற பேச்சு கட்சிக்காரர்கள் மத்தியிலேயே வெளிப்படையாக பேசப்பட்டும் வருகிறது.
தேனி ஜீவா
அதுபோல் திமுக சார்பில் கடந்த முறை தோல்வியை தழுவிய முன்னாள் பேரூராட்சி தலைவர் அன்பழகன் மீண்டும் சீட் கேட்டு வருகிறார். இந்த அன்பழகன் முன்னாள் மாவட்ட செயலாளர் மூக்கையாவின் ஆதரவாளர் என்பதால் கடந்த முறை மூக்கையா ஆசியோடு சீட் கிடைத்தது. ஆனால் தற்பொழுது மூக்கையா ஓரம் கட்டப்பட்டு மாவட்ட செயலாளராக கம்பம் ராமகிருஷ்ணன் இருக்கிறார். இருந்தாலும் அன்பழகன் சீட் கேட்டு வருகிறார். அதோடு சிபிஐ யில் பத்து வருடங்களாக மாவட்ட செயலாளராக இருந்த தேனி ஜீவா கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது தேனி வந்த தலைவர் ஸ்டாலின் முன்னிலையில் ஆயிரம் பேருடன் திமுகவில் ஐக்கியமாகி கட்சி பணி ஆற்றிவந்ததின் மூலம் கழக துணைபொதுச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான ஐ.பெரியசாமி பரிந்துரையின் பேரில் விவசாய தொழிலாளர் அணியின் மாவட்ட அமைப்பாளராக பொறுப்புக்கு வந்த தேனி ஜீவா கடந்த நான்கு வருடங்களாக கட்சி பணியாற்றி கொண்டு தொண்டர்களையும் அரவணைத்து வருகிறார். அதோடு ஐ.பி. மற்றும் மாவட்ட பொறுப்பாளர் கம்பம் ராமகிருஷ்ணனின் ஆசியும் இருந்து வருகிறது அதோடு கடந்த தேர்தலின் போதே சீட் கேட்டு இருந்தவர் இந்த முறையாவது சீட் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் இருந்து வருகிறார் அதோடு பெரியகுளம் ஒன்றிய குழு உறுப்பினர் காமராசர், நகர உயர் மட்ட குழு உறுப்பினர் சண்முகசுந்தரம் உள்பட பத்துக்கு மேற்பட்ட பொருப்பில் உள்ள உ.பிகளும் சீட்டுக்காக மோதி வருகிறார்கள் இருந்தாலும் தேனி ஜீவா அல்லது அன்பழகன் இருவரில் ஒருவருக்கு தான் சீட் கிடைக்கும் என்ற பேச்சு உ.பி.கள் மத்தியில் பரவலாக பேசப்பட்டும் வருகிறது.
அன்பழகன்
ஆனால் இந்த பெரியகுளம் தொகுதி பொது தொகுதியாக இருந்த போது ஓபிஎஸ் வெற்றி பெற்று முதல்வராகவும் இருந்து இருக்கிறார். அதனால் ஓபிஎஸ்சின் சொந்த ஊர் தொகுதி என்பதால் எப்படியும் இந்த இடைத்தேர்தலில் தனது ஆதரவாளரை களத்தில் இறக்கி வெற்றி பெற வைத்து கதிர்காமை அரசியலில் இருந்து ஓரம் கட்ட முடிவு செய்து வருகிறார். அதன் எதிரொலியாகத் தான் இப்பவே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தும் தொகுதியில் களம் இறங்கி டிடிவி ஆதரவாளர்களை பணத்தாலும். செயின், மோதிரத்தாலும் தங்கள் பக்கம் இழுத்து வருகிறார் என்ற பேச்சு ர.ர.க்கள் மத்தியிலேயே பேசப்பட்டு வருகிறது.
ரவீந்திரநாத்
ஆனால் டிடிவி ஆதரவாளர்கள் சிலரிடம் கேட்டபோது... எங்களை ஓபிஎஸ்சும், அவருடைய மகன் ரவீந்திரநாத்தும் விலை கொடுத்து எல்லாம் வாங்க முடியாது. இந்த தொகுதியில் மீண்டும் கதிர்காமு தான் வெற்றி பெறுவார். அந்த அளவுக்கு டிடிவி ஆதரவாளர்கள் இத்தொகுதியில் பெரும்பான்மையாக இருக்கிறார்கள். அதோடு தாழ்த்தப்பட்ட சமூகத்தினர் மத்தியில் ஓபிஎஸ் மேல் ஒரு அதிருப்தியும் இருந்து வருவதால் இந்த இடைத்தேர்தல் மூலம் ஓபிஎஸ்க்கு சரியான பாடம் புகட்டுவோம் என தெம்பாகவே பேசி வருகிறார்கள். ஆக இப்பவே ஓபிஎஸ்சின் சொந்த ஊரான பெரியகுளம் தொகுதியில் இடைத்தேர்தலுக்கான சீட்டுக்கு கரைவேஷ்டிகளும் மோதி வருகிறார்கள்!