Skip to main content

குடியிருப்பு பகுதிகளில் தஞ்சம் அடையும் முதலைகள்; பொதுமக்கள் அச்சம்!

Published on 02/03/2025 | Edited on 02/03/2025

 

Crocodiles taking refuge in residential areas public fears

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள சி. வக்ராமரி கிராமத்தின் குளத்தில் இன்று (02.03.2025) முதலை ஒன்று சென்றுள்ளது. இதனை அப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்கச் சென்ற பொதுமக்கள் பார்த்து அலறி அடித்து ஓடிக் கூச்சலிட்டுள்ளனர். அதன் பின்னர் இதுகுறித்து சிதம்பரம் வனத்துறையினருக்குத் தகவல் தெரிவித்தனர். அதனடிப்படையில் சிதம்பரம் வனச்சரக அலுவலர் வசந்த் பாஸ்கர் தலைமையில் சிதம்பரம் பிரிவு வனவர் பன்னீர்செல்வம், வனக்காப்பாளர் அன்புமணி உள்ளிட்டவர்கள் சம்பந்தப்பட்ட குளத்திற்குச் சென்றனர். அதன்பின்னர் பொதுமக்கள் உதவியுடன் குளத்தில் வலை வீசி 7 அடி நீளமுள்ள 50 கிலோ மதிக்கத்தக்க முதலையைப் பத்திரமாகப் பிடித்து வக்கிராமரி நீர்த் தேக்க ஏரியில் பாதுகாப்பாக விட்டனர்.

இதேபோல் நேற்று (01.03.2024) குமராட்சி கிராமத்தில் ரமேஷ் என்பவரின் வீட்டின் முன்பகுதியில் முதலை புகுந்துள்ளது. இதனையும் மீட்டு வக்காரமாரி ஏரியில் விட்டுள்ளனர். இந்த முதலை 6 அடி நீளம்  30 கிலோ எடை என வனத்துறையினர் தெரிவித்தனர். சிதம்பரம், காட்டுமன்னார்கோவில் பகுதியில் தொடர்ந்து இதுபோன்ற முதலைகள் அடிக்கடி குடியிருப்பு மற்றும் நீர்நிலைகளில் தஞ்சம் அடைகிறது. சில நேரங்களில் நீர்நிலைகளில் முதலைகள் இருப்பது தெரியாமல் விவசாயிகள் மற்றும் கூலித் தொழிலாளர்கள் விவசாய வேலையை முடித்துவிட்டு கால், கைகளைக் கழுவச் சென்றபோது முதலை கடிக்கு ஆளாகிப் பல பேருக்கு கை கால்களை இழந்துள்ளனர். இதில் பலர் உயிரிழந்தும் உள்ளனர்.

இதற்கு நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் தொடர்ந்து தமிழக அரசை வலியுறுத்தி வருகிறார்கள். இதுகுறித்து வனத்துறையினர் கடந்த 2 மாதத்திற்கு முன் கடலூர் மாவட்டத்தில்  சில இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அப்போது வெள்ளநீரில் பல்வேறு இடங்களில் இருந்த முதலைகள் வெள்ளநீருடன் அடித்து வந்து நீர் நிலைகளில் தஞ்சமடைந்துள்ளது. நீர்நிலை வற்றும் போது அது இரை தேடிக் குடியிருப்பு பகுதிகளுக்குச் செல்கிறது. இது குறித்து தகவல் கிடைத்தவுடன் அதனைப் பிடித்து விடுகிறோம் என்றும். இதேபோன்று மழை மற்றும் வெள்ள காலங்களில் முதலைகள் ஆறுகளிலும், நீர்த்தேக்க அணைகளில் இருந்தும் தண்ணீரில் அடித்து வருவதால் முதலைகள் அதிகமாக இந்த பகுதியில் வந்து தஞ்சமடைந்துள்ளதாகக் கூறுகின்றனர். 

சார்ந்த செய்திகள்