இன்று (28/8/2021) 12 மணியளவில் சென்னை மயிலாப்பூரில் உள்ள காவல்துறை இயக்குநர் அலுவலகத்தில், முன்னாள் காங்கேயம் சட்டமன்ற உறுப்பினர் உ. தனியரசுவின் உடன்பிறந்த சகோதரர் தெய்வசிகாமணி என்ற நல்லரசு புகார் ஒன்றைக் கொடுக்க வந்தார். அதில், சொத்துக்களை அபகரித்ததுடன் குடும்பத்தினருக்குக் கொலை மிரட்டல் விடுத்தது தொடர்பாகவும், வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தது தொடர்பாகவும் அவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி உரிய ஆதாரத்துடன் புகார் மனு அளித்தார்.
அதன் பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த தனியரசுவின் சகோதரர் பேசியதாவது, “இன்று சொத்துக்கள் அபகரிப்பு தொடர்பான மனுவைக் கொடுக்க காவல் நிலையத்துக்கு வந்துள்ளேன். எங்களுடைய குடும்ப சொத்துக்களையும் கூட்டாக வாங்கிய சொத்துகளையும் 15 வருடங்களாக ஆக்கிரமிப்பு செய்துள்ளார். மேலும் அதிலிருந்து வரும் வருமானங்களை அவரே வைத்துக்கொண்டு, எங்களை அந்த இடங்களுக்குள் அனுமதிப்பதில்லை. அதேபோல் தொடர்ந்து எங்களை மிரட்டியும்வருகிறார். கடந்த ஆட்சியில் நான் தொடர்ந்து சம்பந்தபட்ட அதிகாரிகளுக்கு மனு கொடுத்தும் அவர்கள் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை. என் மீது நிறைய கொலை மிரட்டல் இருந்ததன் காரணமாக நானும் இதுவரைக்கும் பயந்து யாரிடமும் சொல்லவில்லை.
தற்போது திமுக தலைமையிலான அரசு சிறப்பாக செயல்படுகின்ற காரணத்தால், எனக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையில் காவல்துறை இயக்குநரிடம் புகார் மனு அளித்துள்ளேன். அது மட்டுமில்லாமல் கடந்த பத்து ஆண்டுகளில் அளவுக்கு அதிகமாக சொத்துக்கள் சேர்த்து வைத்துள்ளார். சுமார் 80 கோடிக்கும் மேலாக சொத்துக்கள் வைத்துள்ளார் அதற்கு உண்டான ஆவணங்களையும் புகார் மனுவில் இணைத்துக் கொடுத்துள்ளேன். இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வந்து நிலங்களை அளவீடு செய்து தவறான முறையில் சம்பாதித்ததை அரசுடமையாக்கி நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், தற்போது நடைபெறும் இந்த நேர்மையான ஆட்சி தொடர நான் வாழ்த்துகிறேன். இதனால் எனக்கும் நீதி கிடைக்கும் என நம்புகிறேன்” என தெரிவித்தார்.