இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த நிர்வாகி ராமண்ணின் முதலாம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு அவரது நினைவு கல்வெட்டை புத்தூர் ஆட்டுமந்தை தெருவில் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் திறந்து வைத்தார். திருச்சி மாநகராட்சி மேயர் மு.அன்பழகன் ராமண்ணின் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த முத்தரசன், “மத்திய அரசு மானியம் தர மாட்டோம் என்று அழுத்தம் கொடுத்ததன் காரணமாக தமிழக அரசு மின் கட்டணத்தை உயர்த்தி இருந்தாலும், 100 யூனிட் வரை இலவச மின்சாரம் மற்றும் குடிசை வீடுகளுக்கான சலுகை தொடரும் என்று அமைச்சர் அறிவித்திருக்கிறார். ஏற்கனவே விலைவாசி உயர்வில் மக்கள் சிரமப்படும் இந்த வேளையில் மின் கட்டணத்தை உயர்த்தியிருப்பதை அரசு மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என்று ஏற்கனவே அறிவுறுத்தி இருக்கிறோம்.
கருத்துக்கேட்பு கூட்டத்திலும் பெரும்பாலும் மின்கட்டணர்வு உயர்வு கூடாது என்று சொல்லி இருக்கிறார்கள். பாஜக அண்ணாமலை வாயைத் திறந்தாலே பொய் பேசுகிறார். அவரிடம் எந்த அரசியல் நாகரிகத்தையும் எதிர்பார்க்க முடியவில்லை. செருப்பு வீசுவதை நியாயப்படுத்துகிறார். வன்முறையை தூண்டிவிடுவதுபோல பேசுகிறார். இதனால் அவர் சொல்கிற கருத்திற்கு முக்கியத்துவம் கொடுக்க தேவையில்லை. ராகுல் காந்தியின் ஒற்றுமை பயணம் வெற்றி பெற இந்திய கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் வாழ்த்து தெரிவிக்கின்றோம்” என்றார்.
கன்னியாகுமரியில் ராகுல் காந்தி முன்பு பாதிரியார் ஜார்ஜ் பொன்னையா பேசிய சர்ச்சை கருத்து பற்றி கேட்டதற்கு, “அவரவர் மதத்தின் கடவுளை உண்மையான கடவுள் என்று சொல்ல அவர்களுக்கு உரிமை இருக்கிறது. அவர் கூறியது சர்ச்சைக்குரிய கருத்து கிடையாது. அவரைக் கேட்டால் ’இயேசு’ என்று சொல்லுவார், இஸ்லாமியரை கேட்டால் ’அல்லா’ என்று சொல்வார்கள். இந்துக்களை கேட்டால் ’திருமால்’ என்று சொல்வார்கள்” எனப் பதிலளித்தார்.
ராகுல் காந்தி காதி அணியாமல் விலையுயர்ந்த டி-சர்ட் அணிந்தது குறித்து எழுந்த சர்ச்சை குறித்து கேள்வியெழுப்பியபோது, “முதலில் பிரதமர் மோடி போடும் சட்டையின் விலை குறித்து பட்டியல் போட சொல்லவும். உலகத்திலேயே யாரும் இவ்வளவு விலை உயர்ந்த உடை அணிந்தது கிடையாது.
ராகுல் காந்தியின் டி-சர்ட் விலை எனக்கு தெரியாது, நான் ஒன்றும் ஜவுளிக்கடை வைத்திருக்கவில்லை. இதை சர்ச்சையாக்க தேவையில்லை. ராகுல் காந்தியின் அரசியல் ரீதியான கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல் இப்படிப்பட்ட மலிவான அரசியல் மூலம் அந்தப் பிரச்சார பயணத்தை இழிவுபடுத்துகிறது பாஜக.
திமுக தேர்தல் அறிக்கையில் பழைய ஓய்வு திட்டத்தை அமல்படுத்துவோம் என்று அறிவித்திருந்தது. நிதிநிலை சரிசெய்த பிறகு அமல்படுத்தப்படும் என்று அமைச்சர் தெரிவித்திருக்கிறார். தொழிலாளர்களுக்கு எதிராக மாநில அரசு எதையும் செய்யாது என்று நம்புகிறோம்” எனப் பதிலளித்தார்.