தமிழ்நாட்டின் முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆரின் 106 ஆவது பிறந்தநாளை அதிமுகவினர் மிக உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.
சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி உட்பட கட்சியின் முக்கியத் தலைவர்கள் எம்.ஜி.ஆரின் சிலைக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர். இந்நிகழ்வில் கலந்துகொண்ட முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார், பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது பேசிய அவர், “சசிகலா ஆயிரம் கருத்து சொல்லலாம். அதை எல்லாம் யாரும் பொருட்படுத்துவதாகத் தெரியவில்லை. அவர் இதற்கு முன் எவ்வளவு கருத்துகளைச் சொல்லி உள்ளார். அதிமுகவை பொறுத்தவரை அதையெல்லாம் பெரிதாக எடுத்துக்கொள்ள முடியாது. இபிஎஸ் தலைமையில் அதிமுக எழுச்சியுடன் உள்ளது. இந்நிலையில், சசிகலா யார்? இதைப் பேசுவதற்கு.
சசிகலாவைப் பொறுத்தவரை ஒருங்கிணைக்கும் வேலையைச் செய்யட்டும். டிடிவி ஓபிஎஸ் ஆகியோரை ஒருங்கிணைத்து தனிக்கட்சி தொடங்கினால் நல்ல விஷயம் தான். அதற்கு நான் குறுக்கே நிற்க மாட்டேன். அதிமுக தொண்டர்களின் நிலைப்பாடு அனைத்தும் ஒன்றாக இருக்கும்பொழுது சசிகலாவின் கருத்தினை தேவையில்லாத ஒன்றாகத்தான் அதிமுக தொண்டர்கள் கருதுவார்கள்.” எனக் கூறினார்.