விழுப்புரம் வடக்கு மாவட்ட தி.மு.க. செயலாளராக உள்ள எம்.எல்.ஏ. செஞ்சி மஸ்தானுக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எப்போதும் பரபரப்பாக இருப்பவர். கட்சிக்காரர்கள் குடும்ப திருமணம், துக்கம் போன்ற அனைத்து நிகழ்ச்சிகளுக்கும் தவறாமல் சென்று வருபவர். மேலும் தி.மு.க. தலைவர் ஸ்டாலின் அறிவித்த ஒன்றிணைவோம் நிகழ்ச்சியில் பல்வேறு கிராமங்களுக்குச் சென்று பொதுமக்களுக்கும் கட்சிக்காரர்களுக்கும் நிவாரண உதவிகளை வழங்கி வந்துள்ளார். அதோடு இரண்டு நாட்களுக்கு முன்பு பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளார். மேலும் அரசு அதிகாரிகளைச் சந்தித்து பொதுமக்கள் பிரச்சினை தொடர்பாக மனுக்களை வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் மூன்று நாட்களுக்கு முன்பு அவருக்கு உடல் சோர்வு, காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் விழுப்புரத்தில் உள்ள தனியார் மருத்துவமனை டாக்டரிடம் ஆலோசனைக் கேட்டுள்ளார். அவர் அரசு மருத்துவமனை அல்லது ஆரம்ப சுகாதார நிலையங்களில் பரிசோதனை செய்து கொள்ளுமாறு கூறியுள்ளார். இதையடுத்து செஞ்சி அருகே உள்ள ஒட்டம்பட்டு ஆரம்ப சுகாதார நிலையத்தில் எம்.எல்.ஏ. மஸ்தானுக்கு கரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவு நேற்று காலை 10 மணி அளவில் வெளிவந்தது. அதில் அவருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனையடுத்து மஸ்தான் எம்.எல்.ஏ. சென்னை குரோம்பேட்டையில் உள்ள லேகா தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்குச் சேர்ந்துள்ளார். அங்கு அவருக்குத் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
எம்.எல்.ஏ. வீடு அமைந்துள்ள தேசூர் பாட்டை சாலையில் தடுப்புகள் அமைக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவரது மனைவி, மகன் ஆகியோர் மருத்துவமனையில் தங்கி உள்ளனர். அவரது கார் டிரைவர் மற்றும் குடும்பத்தினர் அலுவலக பெண் ஊழியர் வீட்டு வேலையாட்கள் என 22 பேர்களுக்கு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவக் குழுவினர் நேற்று மருத்துவப் பரிசோதனை செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் எம்.எல்.ஏ. வீட்டிலேயே தனிமைப் படுத்தப்பட்டுள்ளனர்.