விசிக துணைப் பொதுச்செயலாளராக இருந்த ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' என்ற நூல் வெளியீட்டு விழா கடந்த 6ஆம் தேதி (06.12.2024) சென்னையில் உள்ள நந்தம்பாக்கத்தில் நடைபெற்றது. த.வெ.க. தலைவர் விஜய் இந்நூலை வெளியிட ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு பெற்றுக் கொண்டார். இந்நிகழ்ச்சியில் ஆதவ் அர்ஜுனா பேசுகையில், “தமிழகத்தில் கூட்டணி ஆட்சியை உருவாக்க வேண்டும். எனவே மன்னராட்சியை ஒழிக்க வேண்டிய நேரம் இது” எனப் பேசியிருந்தார். இது தமிழக அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இதனையடுத்து வி.சி.க.வில் இருந்து ஆதவ் அர்ஜுனா இடைநீக்கம் செய்யப்பட்டார்.
இதனையடுத்து தனியார் தொலைக்காட்சிக்கு ஆதவ் அர்ஜூனா அளித்த பேட்டியில் திமுகவைச் சேர்ந்த அமைச்சர் எ.வ. வேலு, தொல். திருமாவளவனைப் புத்தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கக் கூடாது என்று அழுத்தம் கொடுத்ததாகத் தெரிவித்து இருந்தார். அதனைத் தொடர்ந்து விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இருந்து விலகுவதாக ஆதவ் அர்ஜுனா தெரிவித்திருந்தார். இந்நிலையில் அமைச்சர் எ.வ. வேலு மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் இது தொடர்பாக பேசுகையில், “என்னிடம், தொல். திருமாவளவன் நட்பு என்பதைத் தாண்டி சகோதரத்துவ பாசத்துடன் பழகக்கூடியவர். தொல். திருமாவளவன் எதிர் முகாம் நிலைப்பாட்டை எடுத்தபோது கூட என்னிடம் நன்றாகப் பேசக்கூடியவர்.
அதன்படி என்னிடம் அவர் பேசுகிறார் என்பதற்காக அழுத்தம் கொடுப்பது என்பது பொருள் அல்ல. அப்படி அழுத்தம் கொடுக்கவும் இல்லை. அவ்வாறு அழுத்தம் கொடுக்க அவசியமும் இல்லை. திருமாவளவன் அறிவாளி. அரசியலில் தொலைநோக்கு பார்வை உள்ளவர் அரசியலைப் பற்றி நன்கு புரிந்து கொண்டவர். அவருக்கு மற்றொருவர் அழுத்தம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. 2001ஆம் ஆண்டு முதல் திருமாவளவன் உடன் பழகி வருகிறேன். எனவே அப்படி ஒரு சம்பவம் நடைபெறவே இல்லை” எனத் தெரிவித்தார்.
கடந்த சில தினங்களுக்கு முன்னதாக தொல். திருமாவளவன் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் பேசுகையில், “என்னை யாரும் இணங்க வைக்க முடியாது. இந்த கருத்தில் நான் உறுதியாக உள்ளேன். புத்தக வெளியிட்டு நிகழ்ச்சியில் பங்கேற்க முடியாது என்பது நான் சுதந்திரமாக எடுத்த முடிவு. விஜய்யின் மாநாடு முடிந்த ஒரு சில நாட்களிலேயே புத்தக பதிப்பகத்தாரிடம் இந்த தகவல்களைத் தெரிவித்துவிட்டேன். எல்லா நேரங்களிலும் முதல்வரைச் சந்திக்க முடியாது. அச்சமயத்தில் மூத்த அமைச்சர்களாக இருப்பவர்களைச் சந்திக்க வேண்டிய நிலை ஏற்படும். அந்த அடிப்படையில் அமைச்சர் எ.வ. வேலுவை சந்தித்தேன். இதனைக் கருத்தில் கொண்டு ஆதவ் அர்ஜுனா இவ்வாறு பேசியிருக்க வாய்ப்புள்ளது” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.