ஈரோடு, சேலம், நாமக்கல், கரூர் ஆகிய நான்கு மக்களவைத் தொகுதிகளைச் சேர்ந்த பா.ஜ.க. வாக்குச்சாவடி முகவர்கள் கூட்டம் இன்று ஈரோடு அருகே உள்ள சித்தோட்டில் நடந்தது. இதில் அக்கட்சியின் தேசிய தலைவரான அமித்ஷா கலந்து கொண்டார் அப்போது அவர் பேசியதாவது...
"நாடுமுழுவதுமுள்ள நலிந்த விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ரூ 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டத்தை பிரதமர் மோடி அறிவித்தார். ஆனால், இதனை ராகுல்காந்தி ஏளனமாகப் பேசுகிறார். பத்து ஆண்டுகள் ஆட்சியில் இருந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு மூன்று கோடி விவசாயிகளுக்கு மட்டுமே வரி தள்ளுபடி செய்தனர். பாஜக அரசு நாடு முழுவதும் உள்ள 50 கோடி விவசாயிகளுக்கு 75 ஆயிரம் கோடி வழங்கும் திட்டத்தை இதன் மூலம் அறிவித்துள்ளது.
தமிழ்நாடு சிறுவணிகர்களை அதிகம் கொண்ட மாநிலமாகும். இவர்கள் நலனுக்காக 40 லட்சத்திற்கு கீழ் வணிகம் செய்யும் அனைவருக்கும் ஜி.எஸ்.டி.யில் இருந்து விலக்கு அளித்துள்ளோம். தனிநபர் வருமான வரி விலக்கை ரூ ஐந்து லட்சமாக உயர்த்தியுள்ளோம். மீனவர்களின் நலனுக்காக மத்திய அரசு தனி அமைச்சகம் அமைத்துள்ளது. நாடு சுதந்திரம் அடைந்தபின், தற்போதைய அரசு அதிகபட்சமாக மூன்று லட்சம் கோடியை ராணுவத்திற்கு ஒதுக்கியுள்ளது.
தமிழகத்தில் வாழும் பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு எவ்வித சலுகையும் கிடைக்காத நிலை இருந்து வந்தது. ஆனால் தற்போது பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகப்பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு வழங்கி மத்திய அரசு சலுகை அளித்துள்ளது. தமிழகத்திற்கு மத்திய அரசு என்ன செய்துள்ளது என திமுக தலைவர் ஸ்டாலின் கேட்கிறார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுமதி வழங்கியுள்ளோம். ஜவுளித்துறைக்கு ரூ 1200 கோடி தமிழகத்திற்கு ஒதுக்கியுள்ளோம். சென்னை மெட்ரோ ரயில் சேவைக்கு ரூ 2800 கோடி, மோனோரயில் திட்டத்திற்கு ரூ 3200 கோடி தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்களுக்கு ரூ 23 ஆயிரம் கோடி, ரயில்வேதுறைக்கு 20 ஆயிரம் கோடி, பிரதமர் வீடுகட்டும் திட்டத்திற்கு ரூ 3600 கோடி, ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ 828 கோடி, அம்ரூத் நகர் வளர்ச்சித் திட்டத்திற்கு ரூ 4700 கோடி, மாநில நெடுஞ்சாலைத் திட்டப் பணிகளுக்காக ரூ 23 ஆயிரம் கோடி, பாரத் மாதா திட்டத்திற்கு 14 ஆயிரம் கோடி, மத்திய சாலை மேம்பாட்டிற்கு 2100 கோடி, இணையம் துறைமுகத்திற்கு ரூ 28 ஆயிரம் கோடி, சாகர்மாலா திட்டத்திற்கு 1.10 லட்சம் கோடி என தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது ஏழை மக்களுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டத்தில் 28 லட்சம் மகளிருக்கு சிலிண்டர் வழங்கியுள்ளோம். மத்திய பாஜக அரசு இது போன்ற திட்டங்கள் மூலமாக ரூ 5.42 லட்சம் கோடியை தமிழகத்திற்கு கொடுத்துள்ளது. ஆனால், திமுக மத்தியில் ஆட்சிப்பொறுப்பில் பங்கேற்றிருந்தபோது, 2ஜி வழக்கில் ஊழல் செய்தது. காங்கிரஸ் - திமுக கூட்டணி மத்தியில் ஆட்சியில் இருந்தபோது, எந்தவொரு வளர்ச்சியும் தமிழகத்திற்கு ஏற்படவில்லை, ஊழல் முறைகேடுதான் நடந்தது. தமிழகத்தில் பலமான கூட்டணி உறுதி. அனைத்து தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம் மீண்டும் நரேந்திர மோடியை பிரதமராக்குவோம் அது உறுதி"