டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆலோசனை நடைபெற்றது. இந்த ஆலோசனைக் கூட்டத்தில் டி.ஆர்.பாலு, விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், ரவிக்குமார் ஆகியோர் பங்கேற்றனர். நாடாளுமன்ற வளாகத்தில் உள்ள எதிர்க்கட்சிகளின் அறையில் இந்த கூட்டம் நடைபெற்றது. 16 கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்கள் இதில் கலந்து கொண்டனர்.
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரின் இரண்டாவது அமர்வு 13 ஆம் தேதியில் இருந்து துவங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. 13 ஆம் தேதியில் இருந்தே ஆளும் கட்சி மற்றும் எதிர்க்கட்சிகளின் தொடர் முழக்கங்கள் மற்றும் அமளியின் காரணமாக கூட்டம் நடைபெறாத சூழலில் தொடர்ந்து ஒத்திவைக்கப்பட்டுக் கொண்டே வரப்பட்டது. 9 ஆவது தினமான இன்றும் நாடாளுமன்றம் மதியம் 12 மணி வரை ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில், இன்று காலை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே தலைமையில் 16 எதிர்க்கட்சி எம்.பி.க்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் ராகுல் காந்தி மீது ஆளும் கட்சியினர் வைத்த புகார் குறித்தும், ராகுல் காந்தி மக்களவையில் பேச அனுமதி கேட்டும் வாய்ப்பு தொடர்ந்து வழங்கப்படாத நிலையில் எதிர்க்கட்சிகளின் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்தும் விவாதிக்கப்பட்டது.
அதானி குழும விவகாரத்தில் நாடாளுமன்ற கூட்டுக்குழு அமைத்து விசாரிக்க வேண்டும் என்ற எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை இதுவரை அரசு ஏற்றுக்கொள்ளவில்லை. அதற்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்பதற்காகவும் ராகுல் காந்திக்கு கொடுக்கப்பட்டுள்ள சிறை தண்டனையை எதிர்த்தும் எதிர்க்கட்சிகள் நாடாளுமன்ற வளாகத்தில் இருந்து குடியரசுத் தலைவர் இல்லம் வரை ஊர்வலமாக செல்ல திட்டமிட்டுள்ளன. அங்கு குடியரசுத் தலைவரிடம் மனு அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சிகளின் பேரணியை முன்னிட்டு பாஜக தலைமை அலுவலகம் அமைந்துள்ள பகுதி, நாடாளுமன்ற வளாகம், குடியரசுத் தலைவர் இல்லம் போன்ற இடங்களில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.