பா.ஜ.க. சார்பில் தமிழகம் முழுவதும் கொண்டாடப்படும் 'நம்ம ஊர் பொங்கல்' நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக, தமிழக பா.ஜ.க. தலைவர் முருகன், மதுரை விமானநிலையத்திற்கு வந்திருந்தார். அப்போது, செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியதாவது, (பா.ஜ.க. ரஜினியிடம் ஆதரவு கேட்க வாய்ப்புள்ளதா என்ற கேள்விக்கு) “தேசமும் தெய்வீகமும் என் இரு கண்கள் என வாழ்ந்த முத்துராமலிங்கத் தேவரின் வழியில் எங்களது கட்சியானது நடந்துகொண்டிருக்கிறது. ரஜினி ஆதரவு தெரிவித்தால் அதனை வரவேற்போம்” எனத் தெரிவித்தார்.
அ.தி.மு.க.வுடனான கூட்டணி வெற்றி பெரும் பட்சத்தில், ஆட்சியில் பங்கு கேட்க நினைக்கும் பா.ஜ.க.வின் எண்ணம், போகாத ஊருக்கு வழிதேடுவது போல என வைகைச்செல்வன் கூறிய கருத்துக் குறித்த கேள்விக்கு, “தேர்தல் முடியட்டும், அதன்பிறகு அதனைக் குறித்து பேசிக்கொள்ளலாம்” எனத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களின் பல்வேறு கேள்விகளுக்குப் பதில் கூறினார். அவர் கூறியதாவது, “அஞ்சல்துறைத் தேர்வில் தமிழ்மொழி சேர்க்கப்படும் என மத்திய அரசு ஏற்கனவே தெரிவித்தது போல, விரைவில் தமிழ் மொழி சேர்க்கப்படும். அமித்ஷா தமிழகம் வருவது குறித்து அதிகாரப்பூர்வமான தகவல் ஏதும் கிடைக்கப்பெறவில்லை. தேர்தலில் போட்டியிடுவது குறித்து தலைமை என்ன முடிவு செய்கிறதோ அதன்படி செயல்படுவோம்” என்றார்.
மேலும், சிறுபான்மையினருக்கு எதிரி பா.ஜ.க.தான் என மு.க.ஸ்டாலின் கூறியது குறித்த கேள்விக்கு, “அனைத்து கிறிஸ்துவ, முஸ்லீம் சகோதரர்கள் அனைவரும் பா.ஜ.க.வில் ஆர்வமுடன் சேர்கிறார்கள். நாட்டைச் சரியான பாதையில் பா.ஜ.க. கொண்டுசெல்கிறது. தொகுதிப் பங்கீடு குறித்து தேர்தல் நேரத்தில் முடிவு செய்யப்படும். பா.ஜ.க. வேல் யாத்திரை நடத்தி, அதன்மூலம் வைக்கப்பட்ட கோரிக்கையின் காரணமாகவே தைப்பூசத்திற்கு அரசு விடுமுறை வழங்கப்பட்டது” எனத் தெரிவித்தார்.