இடைத்தேர்தல் தேதி எப்போது என்று தெரியாத நிலையில் திருப்பரங்குன்றம் தொகுதியில் களமிறங்கி பணிகளை ஆரம்பித்துவிட்டது டி.டி.வி.தினகரன் டீம்.
தேர்தல் களத்தில் ஈடுபட்ட அ.ம.மு.க. நிர்வாகி ஒருவர் கூறும்போது, இந்த தொகுதியை பொறுத்தவரை 2 லட்சத்து 80 ஆயிரம் வாக்காளர்கள். 292 போலிங் பூத் இருக்கு. ஒரு பூத்துக்கு சராசரியாக 1,200 வாக்காளர்கள்.
அனைத்து பூத்துகளுக்கும் தலா 5 பொறுப்பாளர்களை இப்போதே நியமித்துவிட்டார் தினகரன். இரண்டு மாதத்திற்கு அவர்களுக்கு தினசரி சம்பளம் 1000 ரூபாய் என பேசி 10 ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுக்கப்பட்டுவிட்டது.
அதேபோல் தினசரி 250 வாக்காளர்களைச் சந்திக்கும் கேன்வாசிங் கமிட்டி பொறுப்பாளர்களுக்கு தினசரி சம்பளம் ரூபாய் 500 மற்றும் சாப்பாடு என ஏற்பாடு பண்ணிட்டோம்.
இதுவும் போக பூத் வாரியாக 5 முதல்நிலை பொறுப்பாளர்கள் என கணக்குப் போட்டு 1460 பேருக்கு 25 ஆயிரம் ரூபாய் அட்வான்சும் கொடுத்து உற்சாகப்படுத்தியிருக்கோம். இப்பவே எங்களுக்கு ஒரு லட்சம் ஓட்டு கன்ஃபார்ம்.
இதுமட்டுமல்ல... கடைசி நேரத்துல யாருமே எதிர்பார்க்க முடியாத, யூகிக்க முடியாத அதிரடி வேலையக் காட்டுவாரு எங்க அண்ணன் தினகரன். உறுதியா சொல்றேங்க... இடைத்தேர்தல் ரேஸில் ஜெயிக்கப் போவது நாங்கதான் என பொளத்து கட்டினார்.
நீங்க சம்பளத்துக்கு நியமிச்சியிருக்கிற ஆட்களெல்லாம் உங்க கட்சிக்காரங்களா? என்றதற்கு, 'எங்க கட்சிக்காரங்களும் இருக்காங்க. மற்ற கட்சிக்காரங்களும் இருக்காங்க. மற்ற கட்சிக்காரங்களை, எங்களுக்கு ஓட்டுப்போட வேண்டாய்யா... வேலை செய்யி... சம்பளத்த வாங்கிட்டுப்போன்னு சொல்றோம். அவுங்களும் சரிதான்னு செய்யுறாங்க. மற்ற கட்சிக்காரங்களா இருந்தாலும், எங்கக்கிட்ட சம்பளத்த வாங்கிகிட்டு ஓட்ட மாத்தி போட்டுருவாங்களா...? என்றார்.