அதிமுகவில் தற்போது ஒற்றைத் தலைமை விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதிமுகவின் பெரும்பாலமான மாவட்டச் செயலாளர்கள் எடப்பாடி பழனிசாமிக்கு தங்கள் ஆதரவைத் தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், திருச்சி அதிமுக வடக்கு மாவட்டச் செயலாளர் பரஞ்ஜோதி செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர், “அதிமுகவில் மொத்தம் 75 மாவட்டச் செயலாளர்கள். இரண்டு பேர் தவிர மற்ற அனைவரும் ஒற்றைத் தலைமை வரவேண்டும் என்று கூறுகின்றனர். அவர்களது ஆதரவு அலை எடப்பாடி பழனிச்சாமிக்கு வீசுகிறது. அதிமுக பொதுக்குழு செயற்குழு கூட்டத்திலும் அது எதிரொலித்தது.
ஓபிஎஸ் பொதுக்குழு கூட்டத்தை நிறுத்த டி.ஜி.பிக்கு கடிதம் எழுதினார். அதேபோல் பொதுக்குழு கூட்டம் நடைபெற்ற திருமண மண்டப உரிமையாளருக்கும் கடிதம் எழுதினார். இப்படி தொடர்ந்து கடிதம் எழுதி பொதுக்கூட்டத்தை தடை செய்ய நினைத்தார். அவர் சசிகலா, டிடிவி தினகரன் ஆகியோரை நம்பி கட்சியைக் கொண்டு செல்ல திட்டமிடுகிறார். எனவே அவரின் ஆசை ஒரு போதும் நிறைவேறாது” என்று தெரிவித்தார்.