திமுக தலைவர் ஸ்டாலின் சட்டமன்றத் தேர்தலுக்கான தனது முதல் பிரச்சாரத்தை திருவாரூரில் இருந்து தொடங்குகிறார் என திருவாரூர் மாவட்ட கழக செயலாளர் கூறியிருக்கிறார். தமிழக சட்டமன்றத்திற்கான தேர்தல் வரும் ஏப்ரல் 6ஆம் தேதி ஒரே கட்டமாக நடக்க இருக்கிறது. அரசியல் கட்சித் தலைவர்கள் தீவிர தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் பழனிசாமி சேலம் மாவட்டம் ஏற்காட்டில் இருந்து பிரச்சாரத்தை துவங்கியுள்ளார். அந்த வகையில் திமுக தலைவர் ஸ்டாலின் திருவாரூரில் துவங்குகிறார்.
இதுகுறித்து திருவாரூர் மாவட்டச் செயலாளர் பூண்டி கலைவாணன் செய்தியாளர்களிடம் கூறுகையில், “திருவாரூரில் இன்று (15.03.2021) மாலை 6 மணிக்கு தெற்குவீதியில் நடைபெற உள்ள பிரச்சாரக் கூட்டத்தில் திருவாரூர், நன்னிலம் மற்றும் நாகை சட்டமன்றத் தொகுதியில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணி வேட்பாளர்களை அறிமுகப்படுத்தி, திமுக தலைவர் ஸ்டாலின் வாக்கு கேட்டு பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளார். மேலும் விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் பெண்களுக்கு விரோதமாக செயல்படும் எடப்பாடி பழனிசாமி அரசு மற்றும் மத்தியில் ஆளும் மோடி அரசுக்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக இந்தப் பரப்புரை அமையும்” என்றார்.