நடந்து முடிந்த நாடளுமன்ற தேர்தலுக்கு பிறகு தினகரன் கட்சியில் இருந்து முக்கிய தலைவர்கள் வெளியேறி அதிமுக மற்றும் திமுக கட்சியில் இணைந்து வருகின்றனர். அமமுக கட்சியில் தினகரனின் நம்பிக்கையாக இருந்தவர் புகழேந்தி. இவரும் தினகரன் கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார். இது தினகரன் தரப்பிற்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியது. அதிமுகவில் புகழேந்தி இணைந்த பிறகு தினகரன் பற்றி பல்வேறு குற்றச்சாட்டுக்களை கூறிவந்தார்.
இந்த நிலையில் சென்னை கொருக்குப்பேட்டையில் எம்.ஜி.ஆர் பிறந்த நாளையொட்டி, அதிமுக சார்பில், கொள்கை விளக்க பொதுகூட்டம் நடைபெற்றது. இதில் சட்டமன்ற உறுப்பினர் செம்மலை மற்றும் தலைமை கழக பேச்சாளர் புகழேந்தி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு பேசினர். அப்போது நிகழ்ச்சியில் பேசிய சட்டமன்ற உறுப்பினர் செம்மலை, தமிழக முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் இணைந்து மக்களுக்காக நல்லாட்சி நடத்தி வருகின்றனர் என பெருமிதம் தெரிவித்தார். இதனையடுத்து கூட்டத்தில் பேசிய புகழேந்தி, தன்னை சட்டமன்ற உறுப்பினராக்கிய ஆர்.கே நகர் மக்களுக்கு டிடிவி தினகரன் இதுவரை என்ன செய்தார் என கேள்வி எழுப்பினார். நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களை சந்தித்த புகழேந்தி, ஆர்.கே நகரில் ஓட்டுக்கு 20 ரூபாய் டோக்கன் யோசனையை டிடிவி தினகரனுக்கு கூறியது, தற்போது திமுகவின் செந்தில் பாலாஜிதான் என தெரிவித்தார்.