அகில இந்திய காங்கிரசின் செயற்குழு உறுப்பினர்கள் பட்டியலை புதிதாக மாற்றியமைத்திருக்கிறார் சோனியா காந்தி. இந்த மாற்றலில் காங்கிரஸின் மூத்த தலைவர் ப.சிதம்பரத்தை சோனியாகாந்தி அசிங்கப்படுத்தி விட்டதாக அவரது ஆதரவாளர்கள் கொந்தளிக்கின்றனர்.
அவர்களிடம் நாம் பேசியபோது, "காங்கிரஸில் 'வொர்க்கிங் கமிட்டி' என்கிற கட்சியின் செயற்குழுதான் அதிகாரமிக்கது. காங்கிரஸின் வலிமையான அமைப்பு என்பது இதுதான். செயற்குழுவின் புதிய பட்டியலில் 22 பேர் நியமிக்கப்பட்டிருக்கிறார்கள். அதில் 15-தாவது இடத்தில் பிரியங்கா காந்தியும் 16-வது இடத்தில் ப.சிதம்பரத்தையும் பட்டியலிட்டிருக்கிறார் சோனியா. இதை விட அவரை யாரும் அவமானபடுத்திட முடியாது.
இன்றைக்கு கட்சியிலுள்ள மூத்த தலைவர்களில் மோடி அரசை தைரியமாக எதிர்கொள்வதும் விமர்சிப்பதும் சிதம்பரம் தான். அவரைப் போய் 16-வது இடத்தில் வைத்திருப்பது தவறு. அதுவும் கட்சிக்குள் கடந்த வருடம் வந்த பிரியங்கா காந்திக்கு பிறகு சிதம்பரம் என்பதை எங்களால் ஜீரணிக்கவே முடியவில்லை " என்கிறார்கள்.
செயற்குழு உறுப்பினர்களை நியமித்திருப்பதுப்போல பல்வேறு மாநிலங்களின் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர்களையும் மாற்றியமைத்திருக்கிறார் சோனியாகாந்தி. இதில், தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக இருந்த முகுல்வாஸ்னிக்கை மாற்றி விட்டு புதிய பொறுப்பாளராக தினேத் குண்டுராவ் நியமிக்கப்பட்டுள்ளார். அதேபோல, தமிழக எம்.பி. மாணிக்கம் தாகூரை தெலுங்கானா காங்கிரஸின் மேலிட பொறுப்பாளராக நியமித்துள்ளார் சோனியா.