திமுகவினருடன் அடிக்கடி விவாதிப்பதைக் கடந்து தமிழக அரசியல் நடவடிக்கைகளை காணொலி காட்சி மூலம் முன்னெடுத்து வரும் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சென்னையில் பத்திரிகையாளர்களை இன்று ஜூம் செயலி வழியாகச் சந்தித்தார். கரோனா பரவல் அதிகரித்து வரும் நெருக்கடியான இந்தக் காலக்கட்டத்தில் கரோனா பரவல் குறித்து பத்திரிகையாளர்களுடன் விவாதிக்கவே இந்தச் சந்திப்பை ஏற்பாடு செய்தது திமுக!
இந்தச் சந்திப்பில் நக்கீரன் உள்பட பல்வேறு அச்சு ஊடகங்களும் காட்சி ஊடகங்களும் கலந்துகொண்டன. முதலில் மு.க.ஸ்டாலின் உரையாற்றுவது, பிறகு, பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு ஸ்டாலின் பதிலளிப்பது என்பதாக தீர்மானிக்கப்பட்டது. நேரடி பத்திரிகையாளர் சந்திப்பில் கேட்பது போல இந்தச் சந்திப்பை நடத்துவது சிரமம் என்றும், அதனால், பத்திரிகையாளர்கள் தாங்கள் கேட்கும் கேள்விகளை சாட் வழியாக அனுப்பி வைக்கும்படியும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் காண்ஸ்டைன் ரவீந்திரன் கேட்டுக் கொண்டார்.
அதன்படி, நாம் (நக்கீரன்) உட்பட பத்திரிகையாளர்கள் பலரும் கரோனாவை மையப்படுத்தி பல கேள்விகளை அனுப்பி வைத்தோம்.
காலை 11 மணிக்கு சந்திப்பைத் துவக்கிய மு.க.ஸ்டாலின், சுமார் 45 நிமிடங்கள் பேசினார். கரோனா காலம் துவங்கியதிலிருந்து மக்கள் படும் அவஸ்தைகள், முதல்வர் எடப்பாடி அரசின் தவறுகள், ஆட்சி அதிகாரத்தில் நடக்கும் மோதல்கள், பரிசோதனை குளறுபடிகள், ஊழல்கள், சமூகப் பரவலாக மாறியுள்ள கரோனா தொற்று, மரணம் உள்பட ஆட்சியாளர்களால் மறைக்கப்படும் உண்மைகள் என பல விசயங்களைப் பகிர்ந்து கொண்டார் ஸ்டாலின். இது குறித்து வெளிப்படையான பதில்களை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவிக்க வேண்டும். இல்லையெனில், அது குறித்து நீதிமன்றத்தில் திமுக வழக்குப் போடும் என எச்சரித்து தனது பேச்சை நிறைவு செய்தார் ஸ்டாலின்.
இதனையடுத்து, பத்திரிகையாளர்கள் அனுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த ஸ்டாலின், ஓரிரு கேள்விகளுக்கு மட்டும் பதில் சொல்லிவிட்டுச் சந்திப்பை முடித்துக்கொண்டார். இதனால் பத்திரிகையாளர்களிடையே அதிருப்தி ஏற்பட்டது.
ஸ்டாலினிடம் சில முக்கியக் கேள்விகள் கேட்க வேண்டும் என காணொலி காட்சி வழியாகவே, காண்ஸ்டைன் ரவிந்திரனிடம் நாம் கேட்டபோது, ‘’அடுத்த சந்திப்பில் அவருடன் கேள்வி கேட்பது போல அமைக்கப்படும்‘’ என்றார். அதேபோல, பெண் பத்திரிகையாளர் ஒருவரும் ஒரு முக்கியக் கேள்வியை எழுப்ப, அவருக்கும் அதே பதில் தரப்பட்டது. காணொலி காட்சி வழியான பத்திரிகையாளர் சந்திப்பின் இணைப்பும் துண்டிக்கப்பட்டது.