Skip to main content

‘பாஜகவின் கருத்தைதான் விஜய்யும் கூறியிருக்கிறார்’ - தமிழிசை

Published on 11/01/2025 | Edited on 11/01/2025
Vijay has also expressed the BJP's opinion today says Tamilisai

அரசியல் கட்சி தொடங்கியதில் இருந்து அறிக்கைகள் மூலமாகவும், சமூக வலைதள பதிவுகள் மூலமாகவும், சமூக பிரச்சனைகளுக்கு கருத்து தெரிவித்து வரும் த.வெ.க. தலைவர் விஜய் இன்று, “தேர்தல் பிரச்சாரத்தின் போது, நாங்கள் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வைக் கண்டிப்பாக ரத்து செய்வோம், நீட் தேர்வை ரத்து செய்யும் ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று பிரச்சாரம் செய்து, தமிழக மக்களை நம்ப வைத்தவர்கள், தற்போதைய ஆட்சியாளர்கள். ஆனால் தற்போது நீட் தேர்வை ரத்து செய்யும் அதிகாரம் ஒன்றிய அரசிற்குத் தான் உள்ளது. மாநில அரசால் ரத்து செய்ய முடியாது என்று தெரிவித்திருப்பது வாக்களித்த மக்களை ஏமாற்றும் செயல் அல்லவா?” என்று தனது சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டிருந்தார். 

இது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறிய நிலையில், “நீட் தேர்வை மத்திய அரசுதான் ரத்துசெய்ய முடியும். சட்டம், நாட்டின் நடைமுறை, அரசின் நடைமுறை புரிந்தால்தான் இதுகுறித்து பேசமுடியும். சினிமாவில் யாரோ எழுதிக்கொடுத்து பேசப்படும் பஞ்ச் வசனத்தை பேசும் சூழல் கிடையாது” என்று அமைச்சர் சிவசங்கர் காட்டமாக சாடியிருந்தார். அதே சமயம் விசிக தலைவர் திருமாவளவனிடம் இது குறித்து கேட்டபோது, “நீட் தேர்வு ரத்து செய்யும் முயற்சியில் திமுக தனது கடமையை செய்துள்ளது. நீட் தேர்வுக்கு தடையாக இருப்பது மத்திய அரசுதான் என்பதை விஜய் உணர்ந்துள்ளாரா? இந்த விவகாரத்தில் மத்திய அரசுக்கு எதிராக விஜய் குரல் எழுப்ப வேண்டும்” என்று பதிலளித்திருந்தார். 

இந்த நிலையில் பாஜக மூத்த தலைவர் தமிழிசை வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், “நீட் தேர்வு பற்றி தெளிவான கருத்தை பாஜக கூறி வருகிறது. இன்று தமிழக வெற்றிக் கழகத் தலைவர் சகோதரர் விஜய்யும் திமுகவின் பொய் பிரச்சாரத்தை வெளிச்சம் போட்டு காட்டியிருக்கிறார். உடனே அண்ணன் திருமாவளவன்,  தமிழக முதலமைச்சர் அண்ணன் ஸ்டாலின் சொன்னதையே சொல்லி அதாவது மாநில அரசால் நீட் தேர்வை ரத்து செய்ய முடியாது என்று சொல்லி இருக்கிறார்.

நீட்  தேர்வு ரத்து செய்ய முடியாது என்று தெரிந்தும் ஆட்சிக்கு வந்தால் நீட் தேர்வு ரத்துதான் முதல் கையெழுத்து என்று உங்கள் கூட்டணியின் தலைவர் திரு.ஸ்டாலின் ஏன் சொன்னார்? அப்படியென்றால் முடியாது என்று தெரிந்தும் மக்களை ஏமாற்றத்தானே பொய் வாக்குறுதி தந்தீர்கள்? நீட் தேர்வு ரத்து ரகசியம் எங்களுக்குத் தெரியும் என்று கூறிய உதயநிதி ஸ்டாலின் தலைமையில் ஏன் கையெழுத்து வாங்கி மாணவர்களை ஏமாற்றினீர்கள்?

திருமாவளவன் சொல்வதைப் போல நீட் தேர்வு பற்றி முடிவு செய்வது மத்திய அரசு அல்ல? அது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு. அப்படியென்றால் பொய் வாக்குறுதி பேசுவதும், தெரிந்தும் மாற்றிப் பேசுவதும் இப்போது சொல்லலாம் பின்னால் பார்த்துக் கொள்ளலாம் என்று... தமிழக மக்களை ஏமாற்றுவதும் இவர்களது வாடிக்கையாக இருக்கிறது என்பதை தமிழக மக்கள் புரிந்து கொண்டிருக்கிறார்கள்.1967 - இல் ரூபாய்க்கு மூன்று படி அரிசி என்று சொன்ன காலத்திலும் சரி, பொங்கல் பரிசு தருவோம் என்று ஏமாற்றிக் கொண்டிருக்கும் இந்த காலத்திலும் சரி.... திமுகவின் கொள்கை மக்களை ஏமாற்றுவது. கூட்டணி கட்சிகள் அதற்கு ஒத்துப் போவதும், ஒத்து ஊதுவதும் திருமாவளவன் போன்றவர்களின் வேலை. இவர்களை 2026-இல் மக்கள் ஒத்திப்போங்கள் என்று ஓரம் கட்டுவார்கள்” எனக் குறிப்பிட்டுள்ளார். 

சார்ந்த செய்திகள்