காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதியின் எம்.எல்.ஏவுமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கடந்த டிசம்பர் மாதம் 14ஆம் தேதி உடல்நலக் குறைவால் காலமானார். இதனால், ஈரோடு கிழக்கு சட்டமன்றத் தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து இந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதி நடைபெறுகிறது. இந்த இடைத் தேர்தலில் திமுக சார்பில் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக இடைத்தேர்தலைப் புறக்கணிப்பதாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருந்தார். சென்னையில் உள்ள அதிமுகவின் தலைமை கழகத்தில் இன்று (11.01.2025) நடைபெற்ற அதிமுக மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகத் தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலைப் தேமுதிக புறக்கணிக்கிறது என அக்கட்சியின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் அறிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “இதுவரை தமிழக தேர்தலில் நடக்காத ஒரு தேர்தலாக ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் ஆடுகளை மந்தையில் அடைத்து வைத்தது போல் மக்களை அடைத்து வைத்து, ஜனநாயக விரோத தேர்தலை திமுக நடத்தி வெற்றி பெற்றதாக அறிவித்தனர். அதே பாணி இடைத்தேர்தல் தான் மீண்டும் நடக்கப் போகிறது. எனவே ஜனநாயகத்திற்கு விரோதமாக நடக்கும் இந்த தேர்தலில் நம்பிக்கை இல்லாத காரணத்தால், இந்த ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை தேமுதிக புறக்கணிக்கிறது” எனத் தெரிவித்துள்ளார். அதிமுகவும், தேமுதிகவும் கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் கூட்டணி அமைத்துப் போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.