நாடு முழுவதும் கடந்த ஆண்டு ஏழு கட்டங்களாக நடைபெற்ற நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் முடிவுகள் கடந்த ஜூன் 4ஆம் தேதி வெளியானது. இதில் தமிழகத்தில் விசிக 2 மக்களவைத் தொகுதிகளில் போட்டியிட்டு 2 தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதோடு 8 சதவீதத்திற்கும் அதிகமான வாக்குகளைப் பெற்றதால் அங்கீகாரம் பெற்ற கட்சியாக உருவெடுத்திருந்தது. இந்நிலையில் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட கட்சியாக விசிக, இந்தியத் தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விசிகவிற்கு தேர்தல் சின்னமாகப் பானை சின்னத்தையும் அதிகாரப்பூர்வமாகத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது.
ஒரு அரசியல் கட்சி இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அங்கீகாரம் பெற 8% வாக்குகள் தேவை என்பது குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக விசிகவின் நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை உறுப்பினருமான தொல். திருமாவளவன் எக்ஸ் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சி அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சி என்னும் அங்கீகாரத்தை இந்தியத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. விடுதலை சிறுத்தைகள் கட்சிக்குப் பானை சின்னத்தைத் தேர்தல் சின்னமாக அதிகாரப்பூர்வமாக இந்தியத் தேர்தல் ஆணையம் வழங்கியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் இந்த பதிவைச் சுட்டிக்காட்டி தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியை அங்கீகரிக்கப்பட்ட மாநிலக் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருப்பதை அறிந்து மகிழ்கிறேன். அன்புச் சகோதரர் தொல். திருமாவளவனின் உழைப்புக்குக் கிடைத்த அங்கீகாரமாக இதை எண்ணிப் பாராட்டுகிறேன்” எனக் குறிப்பிட்டுள்ளார். அதே சமயம் நாம் தமிழர் கட்சியும், கடந்த நாடாளுமன்ற மக்களவைத் தேர்தலில் 8.22 சதவீத வாக்குகளைப் பெற்றதால் அங்கீகாரம் பெற்ற அரசியல் கட்சியாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.