''ஊரடங்கு நேரத்தில் அரசு கொடுக்கக்கூடிய உதவித் தொகைகள் சரியாக மக்களுக்குச் சேரவில்லை. அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி, சம்பளம் போன்றவற்றில் சிக்கல்கள் வந்திருக்கிறது. மருத்துவப் பணியாளர்களுக்கு அறிவிக்கப்பட்ட சிறப்பு ஊதியம் இதுவரை தரவில்லை என்ற குற்றச்சாட்டுக்கள் அதிமுக அரசு மீது எழுகிறது.
மேலும் ஆளும் கட்சியினரின் கரோனா கால களப் பணிகளும் குறைவாக உள்ளது. அதே நேரத்தில் எதிர்க்கட்சியான திமுகவின் 'ஒருங்கிணைவோம் வா' திட்டம் மூலம் ஏழை எளிய மக்கள் ஓரளவு பயனடைகிறார்கள் என்று அதிமுகவினரே கவலையுடன் பேசிக்கொள்ளும் காட்சிகளெல்லாம் வெளியாகியிருக்கிறது.
தேர்தலுக்கு இன்னும் ஒரு வருடம்தான் இருக்கிறது. இந்த நேரத்தில் கட்சித் தலைமை ஏன் இப்படி இருக்கிறது. பொதுமக்கள், அரசு ஊழியர்கள் மத்தியில் நல்ல பெயர் எடுக்க வேண்டாமா'' என அதிமுகவின் நிர்வாகிகள், அடிமட்ட தொண்டர்கள் முணுமுணுத்து வருகின்றனர்.
இதற்கிடையே உளவுத்துறையோ, அதிமுகவினரில் யார் யார் கரோனா நிவாரண உதவிகள் செய்கிறார்கள். அமைச்சர்களோ, மாவட்டச் செயலாளர்களோ, எம்.எல்.ஏக்.களோ செய்கிற உதவிகளில் யார் யார் எடப்பாடி பழனிசாமி படத்தைப் பெரியதாகப் போட்டுள்ளார்கள், யார் யார் தங்களின் படத்தைப் பெரியதாகப் போட்டு, எடப்பாடி பழனிசாமியின் படத்தைச் சிறியதாகப் போட்டுள்ளார்கள் என்ற லிஸ்டை எடுத்துக்கொண்டிருக்கிறார்களாம்.
அமைச்சர் ராஜேந்திர பாலாஜி, அமைச்சர் ஜெயக்குமார், சுகதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் ஆகியோர் தங்களது படத்தைப் பெரியதாக போட்டுள்ளார்கள். இதில் விஜயபாஸ்கர் கொடுத்த அரிசி பைகளில் வருங்கால முதல்வர் என போடப்பட்டிருந்ததாக ரிப்போர்ட் சென்றிருக்கிறது. அந்த ரிப்போர்ட்டில், அது கிராப்பிக்ஸ் வேலை, ஒரிஜினல் பிரிண்ட் இல்லை என்பதையும் சொல்லியிருக்கிறார்கள்.