சட்டப் பேரவையில் மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள் நடைபெற்று வரும் நிலையில், கிறிஸ்துவர்களாக மாறிய ஆதிதிராவிட சமூகத்தினருக்கு இட ஒதுக்கீடு வழங்குவது தொடர்பான தனித் தீர்மானத்தை சட்டப் பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டு வருகிறார்.
இந்தியாவில் இந்து, சீக்கியம், புத்தம் ஆகிய மதங்களைப் பின்பற்றும் பட்டியலின மக்களுக்கு மட்டுமே அவர்களுக்கான உரிமைகளும், சலுகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. அதேசமயம் முஸ்லீமாகவும், கிறிஸ்துவர்களாகவும் மதம் மாறிய பட்டியலின மக்களுக்கு சலுகைகள் வழங்கப்படுவதில்லை. இது தொடர்பான வழக்குகள் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளன.
இந்த நிலையில் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள சட்ட ரீதியான உரிமைகளும், இட ஒதுக்கீடு உள்ளிட்ட சலுகைகளும் கிறிஸ்துவர்களாக மதம் மாறிய ஆதிதிராவிடர்களுக்கு விரிவுபடுத்தி வழங்க வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்தி, சட்டப் பேரவையில் இன்று முதல்வர் ஸ்டாலின் தனித் தீர்மானம் கொண்டு வரவுள்ளார்.