முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் சென்னை நந்தனத்தில் உள்ள ஒய்.எம்.சி.ஏ மைதானத்தில் நேற்று (01.03.2023) மாலை நடைபெற்றது. முதல்வர் மு.க.ஸ்டாலின், காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுனா கார்கே, காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், பீகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் மற்றும் திமுகவின் கூட்டணிக் கட்சி தலைவர்களான கே.எஸ்.அழகிரி, வைகோ, திருமாவளவன், கே.பாலகிருஷ்ணன், முத்தரசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். விழாவில் தமிழக முதல்வர் ஸ்டாலின் கட்சியில் படிப்படியாக வளர்ந்து தி.மு.க. தலைவராகப் பதவியேற்றது, அதே போல் தமிழக முதல்வராகப் பதவியேற்று தமிழகத்தில் செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்த காணொளி ஒளிபரப்பப்பட்டது.
விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு செங்கோல் வழங்கப்பட்டது. தொடர்ந்து மல்லிகார்ஜுனா கார்கே, ஜம்மு காஷ்மீர் முன்னாள் முதல்வர் பரூக் அப்துல்லா, உத்தரப்பிரதேச முன்னாள் முதல்வர் அகிலேஷ் யாதவ், துரைமுருகன், டி.ஆர்.பாலு உள்ளிட்டோருக்கு மாலை மற்றும் சால்வை அணிவிக்கப்பட்டு நினைவுப் பரிசு வழங்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து தி.மு.க. பொருளாளர் டி.ஆர்.பாலு பேசியபோது, “நகராட்சி தேர்தலில் தி.மு.க. கூட்டணி அதிக இடங்களில் வெற்றி பெற்றுள்ளது. திராவிட மாடல் கொள்கை காரணமாகத்தான் வெற்றி கிடைத்துள்ளது. திராவிட மாடல் இந்தியாவுக்கான மாடல். நமது கூட்டணியில் 10 கட்சிகள் உள்ளன. அனைத்துக் கட்சிகளையும் அரவணைத்துச் செல்லும் பாங்கு திமுக தலைவரிடம் உள்ளது. இதை தேசியக் கட்சித் தலைவர்கள் உணர்ந்து செல்ல வேண்டும். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலுக்குத் தயாராக வேண்டும்” என்றார்.
அதன்பிறகு பேசிய அமைச்சர் துரைமுருகன், “நித்தம் ஒரு புதிய திட்டம், அவற்றை செயல்படுத்துவது, சட்டம் - ஒழுங்கை பாதுகாப்பது, வெளிநாட்டு முதலீட்டை ஈர்ப்பது உள்ளிட்டவற்றை சிறப்பாகச் செய்து வருகிறார் தமிழக முதல்வர். இப்படிப்பட்ட தலைவரை நாடு எதிர்பார்க்கிறது. தனிமனித சுதந்திரம் கிடைக்கவில்லை. மதச்சார்பின்மை இல்லை. இப்படிப்பட்ட நாட்டைக் காப்பாற்ற ஆற்றல்மிக்க தலைவரை இந்தியா தேடுகின்றது. இந்திய அரசியலமைப்பு மற்றும் சட்டத்துக்கு ஆபத்து வரும்போது தமிழகம் தான் கை கொடுத்தது. மிசாவை தமிழகம் மட்டும் தான் எதிர்த்துப் போராடியது. இந்தியாவை நீங்கள் காப்பாற்ற வேண்டும் என நாடு எதிர்பார்க்கிறது. எனவே, திமுக தலைவர் தமிழ்நாட்டைக் காப்பாற்றியுள்ளீர்கள். இந்திய நாடும் ஒருநாள் கோபாலபுரம் வீட்டுக்கு வந்து நீங்கள் தான் நாட்டுக்கு தலைமை ஏற்க வர வேண்டும் எனச் சொல்லும்” என்றார்.
அகிலேஷ் யாதவ் பேசியபோது, “மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு விவசாயிகளுக்கு பல திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறது. உங்கள் தொகுதியில் முதலமைச்சர் திட்டத்தின் மூலமாக பொதுமக்களின் மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. மக்களைத் தேடி மருத்துவம் தமிழகத்தில் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் சைக்கிளிங் செல்வார், சைக்கிள் பிரியர் என்பதை இன்று தெரிந்துகொண்டேன்” என்றார்.
பரூக் அப்துல்லா பேசியபோது, “2024 தேர்தலுக்கான பிரதமர் வேட்பாளரைப் பற்றி இப்போது பேசவேண்டாம். தேசத்தைக் காக்க வேண்டியதுதான் கடமை. திமுக தலைவர் தேசிய அரசியலுக்கு வர வேண்டும். நீங்கள் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, இந்தியாவிற்கே உழைத்து வருகிறீர்கள். ஒரு சிறந்த தலைவரின் மகன் நீங்கள். உங்கள் தந்தையை நான் நன்கு அறிவேன். உங்கள் தந்தையும் என் தந்தையும் ஒரு சிறந்த இந்தியாவைக் கட்டமைக்கப் பாடுபட்டனர். இந்தியாவில் மக்கள் பசியில் உள்ளனர். வேலைவாய்ப்பு இல்லை. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும். ஸ்டாலின் அவர்களே, நீங்கள் தேசிய அரசியலுக்கு வாருங்கள்.
உங்கள் மாநிலத்தின் வளர்ச்சியை தேசிய அளவில் காட்டுங்கள். யூனியன் பிரதேசங்களை மாநிலங்களாக மாற்றுவார்கள். ஆனால், காஷ்மீர் மாநிலத்தை யூனியன் பிரதேசமாக மாற்றியுள்ளனர். நாடு தற்போது இருக்கக்கூடிய சூழ்நிலையில் பிரதமர் வேட்பாளர் முக்கியம் இல்லை. நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். உங்கள் தந்தையின் கனவு, என் தந்தையின் கனவு, என்னுடைய கனவு, உங்களுடைய கனவு எல்லாமே அமைதியான இந்தியா தான். அதற்கு நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். காஷ்மீருக்கும் தமிழகத்திற்கும் உள்ள ஒற்றுமை, எப்போதுமே அமைதியை விரும்புவது தான்” என்றார்.
மல்லிகார்ஜுனா கார்கே பேசும் போது, “மரியாதைக்குரிய முதல்வர் ஸ்டாலின்ஜி 70வது பிறந்தநாளை இங்கு பல்வேறு தலைவர்கள் கொண்டாடுகிறார்கள். எனக்கு 81 வயது. உங்களுக்கு 70 வயது தான் ஆகிறது. அதனால் நான் உங்களை வாழ்த்தலாம். நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும். தமிழ்நாடு எப்போதும் சிறந்த வளர்ச்சி பெற்று வரும் மாநிலம். நல்ல தலைவர்கள், எழுத்தாளர்கள், அரசியல் தலைவர்களை உருவாக்கிய மாநிலம். திமுக, காங்கிரஸ் இணைந்து பல தேர்தல்களைச் சந்தித்துள்ளது. 2024 நாடாளுமன்றத் தேர்தலிலும் திமுக, காங்கிரஸ் கூட்டணி தொடரும், வெற்றிபெறும். பாஜக பிரிவினையை ஏற்படுத்தி வெற்றி பெற்று வருகிறது. பரூக் அப்துல்லா அவர்களே, பிரதமர் யார் என்பது முக்கியமில்லை. யார் தலைமை தாங்குவது என்பது முக்கியமில்லை, அனைவரும் ஒன்றிணைந்து ஜனநாயகத்தைக் காப்பாற்ற அரசியலமைப்பைக் காப்பாற்றப் போராட வேண்டும். அதுதான் முக்கியம்.” என்றார்.
தேஜஸ்வி யாதவ் பேசும்போது, “வட இந்தியாவில் இருக்கும் கட்சிகள் உங்களிடம் சமூக நீதியை கற்றுக்கொள்ள வேண்டும். நம் நாடு பல பிரச்சனைகளில் உள்ளது. வேலையின்மை, பண மதிப்பு வீழ்ச்சி ஆகியவை தான் அவை. அறிவிக்கப்படாத அவசர நிலை நாட்டில் நிலவி வருகிறது. அனைத்து எதிர்க்கட்சிகளும் ஒரே அணியில் ஒன்றிணைய வேண்டும். மு.க.ஸ்டாலின் இன்னும் இளமையாகவே உள்ளார். அவரிடம் நிறைய கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது” என்றார்.
இறுதியாக பேசிய முதல்வர் ஸ்டாலின், “முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் ஆகிய எனக்கு 70வது பிறந்தநாள். நான் என்றும் உங்களின் ஒருவன் .ஸ்டாலின் என்ற பெயரில் நீங்கள் அனைவரும் உள்ளீர்கள். இங்கு கூடியுள்ள அனைவரும் கலைஞரின் பிள்ளை தான். மு.க.ஸ்டாலின் எனும் நான் வீட்டுக்கு விளக்காக, நாட்டுக்கு தொண்டனாக, மக்கள் கவலையைத் தீர்க்கும் தலைவனாக இருப்பேன். இந்த விழாவுக்கு தலைமை ஏற்றுள்ள துரைமுருகன் உள்ளிட்டோருக்கு வாழ்த்துகள். தமிழ்நாட்டு மக்கள் எனக்கு இட்ட கட்டளையின் அடிப்படையில் முதல்வராக உள்ளேன். கடமையையும், பொறுப்பையும் நீங்கள் தான் கொடுத்தீர்கள். அவசரக் காலத்தில் சிறை சென்று சித்திரவதை அடைந்தேன். பொதுவாழ்க்கை என்றால் இப்படி தான் இருக்கும் என்று என்னை சிறைக்கு அனுப்பினார் கலைஞர்.
55 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் எனது கால் படாத இடம் இல்லை. வெயில், இரவு-பகல் பாராமல் உழைத்த எனக்கு 70 வயது ஆகிவிட்டது என்பதை என்னால் கூட நம்ப முடியவில்லை. மக்களுக்காகப் போராடும் நமக்கு கால நேரம் இல்லை. நாளை வழக்கம்போல் பணியைத் தொடங்க உள்ளேன். எனக்கு 70 வயது எனச் சொன்னால் ஆச்சரியப்படுகிறார்கள். வயது என்பது மனதைப் பொறுத்தது. இளமை என்பது முகத்தில் இல்லை. மனதில் உள்ளது. லட்சியவாதிகளுக்கு வயதாவதில்லை. நாளுக்கு நாள் இளைஞன் ஆகிறேன்.
தொடக்கத்தில் இளைஞர் அணியில் இருந்தபோது தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டேன். இன்று உங்கள் முன்பு ஒரு உறுதிமொழி எடுக்கிறேன். அண்ணா, கலைஞர் கட்டியெழுப்பிய கழகத்தை நிரந்தரமாக ஆட்சியில் வைப்பேன். தி.மு.க. அரசு நெறிமுறைப்படி கல்வி, பொருளாதாரத்தில் முன்னேற வேண்டியது அவசியம். கொள்கையை பரப்ப கட்சி, நிறைவேற்ற ஆட்சி. கடந்த 2 ஆண்டுக்காலத்தில் நிறைவேற்றி உள்ளேன். தேர்தல் வாக்குறுதி அளித்ததில் 85 சதவீதம் நிறைவேற்றப்பட்டது. மீதமுள்ளதை இன்னும் ஒரு ஆண்டில் நிறைவேற்றுவேன். என்னைப் பொறுத்தவரையில் நம்பர் ஒன் ஆட்சியைத் தர வேண்டும். மல்லிகார்ஜுனா கார்கே என்னை வாழ்த்தியது எனக்கு பெருமை. இது இந்தியாவின் புதிய அரசியலுக்கான தொடக்கம். இன்றைய காலத்தில் மிக அவசியம் 2024-ம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல். இதில் யார் ஆட்சிக்கு வரக்கூடாது என்பது மிக அவசியம். பா.ஜ.க.வை அரசியல் ரீதியாக வீழ்த்த வேண்டும். இதற்காக அனைத்து அரசியல் கட்சிகளும் ஒன்றிணைய வேண்டும்.
காங்கிரஸ் உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் மாநிலப் பிரச்சனைகளை மறந்து ஒன்றிணைய வேண்டும். தமிழகத்தில் கடந்த 4 ஆண்டுகளில் அடுத்தடுத்த வெற்றி என்பது நமது ஒற்றுமை. தமிழகத்தை போன்று தேசிய அளவில் அனைவரும் ஒன்றிணைய வேண்டும். காங்கிரஸ் இல்லாத கூட்டணி கரை சேராது. தேர்தலுக்குப் பிறகு கூட்டணி, அது வேறு. ஒரே ஒரு செங்கலை வைத்து தமிழகத்தை பா.ஜ.க. கேவலப்படுத்துகிறது. நீட் விலக்கு கொடுக்கவில்லை. சமஸ்கிருத மொழிக்கு கோடி கோடியாக நிதி ஒதுக்கிறது. மகாபாரதத்தில் சூதாட்டம் உள்ளது என நினைத்து ஆளுநர் ஆன்லைன் ரம்மி தடை சட்டத்துக்கு ஒப்புதல் தர மறுக்கிறார். மத்திய பட்ஜெட்டில் தமிழகத்துக்கு நிதி இல்லை. நாடாளுமன்றத் தேர்தலுக்கான முன்னோட்ட கூட்டம் தான் எனது பிறந்தநாள் கூட்டம். வரவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் 40 தொகுதிகளையும் வென்றாக வேண்டும். அதற்காக இன்று முதல் அனைவரும் உழையுங்கள். நாற்பதும் நமதே, நாடும் நமதே” என்றார்.