
மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ இன்று (02.04.2025) தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்த மசோதா மீதான அனல் பறக்கும் விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது. அதன் ஒரு பகுதியாக வி.சி.க. நிறுவனத் தலைவரும், சிதம்பரம் நாடாளுமன்ற மக்களவை தொகுதியின் உறுப்பினருமான தொல். திருமாவளவன் பேசுகையில், “இந்த வக்ஃப் திருத்தச் சட்ட மசோதாவை முற்றாக நான் எதிர்க்கிறேன். இது இசுலாமியர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த தேசத்திற்கே எதிரானது. தேச ஒற்றுமைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் எதிரானது.
அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது ஆகவே, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாக எதிர்க்கிறேன். இந்த மசோதா இஸ்லாமியர்களின் சொத்துக்களை முற்றாக அபகரிப்பதற்கான ஒரு சதி முயற்சியாகவே தெரிகிறது. இசுலாமியர்கள் இசுலாமியர்களின் நலன்களுக்காக உருவாக்கிக் கொண்ட வக்ஃப் சொத்து இசுலாமியர்களால் நிர்வகிக்கப்படுவதுதான் நீதியாகும். ஆனால், அதற்கென உருவாக்கப்பட்டு இருக்கிற நிர்வாகக் குழுவில் இசுலாமியர்கள் அல்லாதவர்களை வாரியத்திலே 11பேரில் ஏழு பேரையும் மத்திய கவுன்சில் (Central council) என்கிற அகில இந்திய அளவிலான அவையில் 22பேரில் 12 பேரையும் நியமித்துக் கொள்வதற்கான வாய்ப்பை இந்த சட்ட மசோதா வழங்குகிறது. இது எந்த வகையிலான நீதியாக இருக்க முடியும். இசுலாமியர்கள் மீதான உங்கள் வெறுப்பு அரசியல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இது ஒரு பாசிசத் தாக்குதலாகத் தான் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன.
ஏற்கனவே சிஏஏ சட்டத்தைக் கொண்டு வந்தீர்கள், ஏற்கனவே பாபர் மசூதியை இடித்தீர்கள், ஏற்கனவே ஜம்மு காஷ்மீரை சிதைத்தீர்கள், இன்றைக்கு இப்படி ஒரு சட்டத்தை கொண்டு வந்து இசுலாமியர்கள் மீதான வெறுப்பு அரசியலை நீங்கள் விதைத்துக் கொண்டிருக்கிறீர்கள். இது வலதுசாரி பெரும்பான்மைவாத பாசிசத் தாக்குதல் என்று நான் சுட்டிக்காட்டி வன்மையாகக் கண்டிக்கிறேன். மேலும், இசுலாமிய சமூகத்தின் ஒற்றுமையை சீர்குலைக்கும் வகையில் ஆகாகான்களுக்கு தனி வக்ஃப் வாரியம் என்றும், ஷியா முஸ்லிம்களுக்கு தனி வக்ஃப் வாரியம் என்றும் போரா முஸ்லிம்களுக்கு தனி வக்ஃப் வாரியம் என்றும் நீங்கள் அறிவித்திருப்பது மிக மோசமான பாசிசத் தாக்குதல் ஆகும். எப்படி இந்துக்களை சாதியின் பெயரால் சாதி பெருமிதங்களை பேசி அவர்களை கூர்மைப்படுத்துகிறீர்களோ, குறிப்பாக பட்டியல் சமூகத்து மக்களை தனித்தனி குழுக்களாக உடைத்திருக்கிறீர்களோ, அதுபோல இசுலாமிய சமூகத்தையும் இன்றைக்கு பிளவுப்படுத்துகிற சமூகப் பிரிவினை வாதத்தை உயர்த்திப்பிடிக்கிறீர்கள். இந்த போக்கை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் மிகவன்மையாக நான் கண்டிக்க கடமைப்பட்டிருக்கிறேன்.
இசுலாமிய சமூகத்துக்கு எதிராக சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த பௌத்தராக இருக்கிற ரிஜிஜு என்கிற அமைச்சரை நீங்கள் பயன்படுத்துகிறீர்கள். சனநாயகத்தை கொன்று புதைப்பதற்கு சனநாயக வடிவத்தை கையில் எடுக்கிறீர்கள். அதுபோல இசுலாமியர்களின் ஒற்றுமையை சீர்குலைப்பதற்கு சிறுபான்மை சமூகத்தைச் சார்ந்த ஒரு அமைச்சரை பயன்படுத்துவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது. புத்தகயாவில் மகா போதி கோவிலில் புத்திஸ்ட் அல்லாதவர்களை உறுப்பினர்களாக வைத்திருக்கிறார்கள். அதை எடுக்கச் சொல்லி பௌத்த பிக்குகள் தொடர்ந்து போராட்டம் நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இந்த அரசு அதைக் கண்டும் காணாமல் வேடிக்கை பார்த்து வருகிறது.

இப்படி சிறுபான்மை மக்களை அச்சுறுத்தக் கூடிய வகையில் உள்துறை அமைச்சர் அமித்ஷா நகைச்சுவையாக இங்கே பேசுகிறார் 'காங்கிரசும் காங்கிரசின் கூட்டணி கட்சிகளும் தான் இஸ்லாமியர்களை வாக்கு வங்கிக்காக அச்சுறுத்துகிறீர்கள்' என்று ஒரு நியாயஸ்தரை போல இங்கே நடித்துக்காட்டுகிறார். இதனை விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மிகவன்மையாகக் கண்டிக்கிறது. சாவர்க்கரின் கனவை நனவாக்குவதற்காக சாவர்க்கரின் தொண்டர்களாக இருக்கின்ற இன்றைய ஆட்சியாளர்கள் இசுலாமியர்களை சீர்குலைக்கிற, கிறித்தவர்களை நசுக்குகிற, பௌத்தர்களை சமணர்களை சீக்கியர்களை அச்சுறுத்துகிற வகையிலே இந்த ஆட்சியை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். இது முற்றிலும் இந்திய ஒருமைப்பாட்டுக்கு எதிரானது, மத நல்லிணக்கத்திற்கு எதிரானது, புரட்சியாளர் அம்பேத்கர் வகுத்தளித்த அரசமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்பதனால் இந்த சட்ட மசோதாவை நான் மிகவன்மையாக எதிர்க்கிறேன். இதை திரும்ப பெற வேண்டும் என வலியுறுத்துகிறேன்” எனப் பேசினார்.