
சென்னை மதுரவாயல் பகுதியில் அடுக்குமாடி குடியிருப்பில் புகுந்து பெண் ஒருவரிடம் செயின் பறிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
சென்னை வானகரம் காவல் எல்லைக்குட்பட்ட அடையாளம்பட்டு பகுதியில் 'கேஜி சிக்னேச்சர்' என்ற 14 அடுக்குகளை கொண்டு குடியிருப்பு இருக்கிறது. இதில் பத்தாவது தளத்தில் மனீஷ் ராணி(44) என்பவர் தனது குடும்பத்தினருடன் வசித்து வருகிறார். இவருடைய கணவர் பஞ்சாப் நேஷனல் வங்கியில் அதிகாரியாக உள்ளார்.
நேற்று வீட்டில் தனியாக இருந்த மனிஷ் ராணி, மாலை பணி முடிந்து கணவர் வருவார் என எதிர்பார்ப்பில் இருந்துள்ளார். இந்நிலையில் நேற்று இரவு 7:30 மணியளவில் 10 வது தளத்திற்கு வந்த நபர் ஒருவர் வீட்டின் காலிங் பெல்லை அழுத்தியுள்ளார். கணவர் தான் வந்துவிட்டார் என மனிஷ் ராணி கதவைத் திறந்த நிலையில், வெளியே நின்ற இளைஞர் அவருடைய கழுத்தில் இருந்த செயினை பறிக்க முயன்றுள்ளார். இதனால் மனிஷ் ராணி கத்தி கூச்சலிட்டதால் அங்கிருந்து அந்த நபர் தப்பி ஓடியுள்ளார்.
பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் அந்த பகுதியில் இருந்த காட்சிகளை ஆராய்ந்த போது சிவப்பு நிற சட்டை, கருப்பு குல்லா அணிந்த நபர் செயின் பறிப்பில் ஈடுபட முயன்ற காட்சிகள் கிடைத்தது. இதில் பெண்ணுக்கு தலையில் காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார். சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் செயின் பறிப்பில் ஈடுபட முயன்றது சதீஷ் என்கின்ற சச்சின் (22) என்பது தெரிந்தது. இவர் மீது போக்ஸோ, திருட்டு வழக்கு என பல்வேறு வழக்குகள் திருவேற்காடு காவல் நிலையத்தில் நிலுவையில் உள்ளது தெரிந்தது. சச்சினை கைது செய்துள்ள போலீசார் அவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.