அதிமுகவின் மூத்த தலைவர்களுள் ஒருவர் மதுசூதனன். அதிமுகவின் அவைத் தலைவராக உள்ள இவருக்கு, கடந்த சில தினங்களுக்கு முன்னர் வயது முதிர்வு காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டு திடீரென மூச்சுத்திணறலும் ஏற்பட்டது. இதையடுத்து சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக மதுசூதனன் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும், அவருக்கு வென்டிலேட்டர் உதவியுடன் சிகிச்சை நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன. அதிமுக அவைத்தலைவராக நீண்ட காலமாக இருந்து வரும் மதுசூதனன், முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அமைச்சரவையில் அமைச்சராகவும் இருந்துள்ளார்.
ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் அதிமுக ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். என இரண்டாக பிரிந்தபோது, தர்மயுத்தம் நடத்திய ஒ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்தார். ஓ.பி.எஸ்-க்கு ஆதரவு தந்த அதிமுக தலைவர்களுள் மதுசூதனன் முக்கியமானவர்.
மதுசூதனின் உடல்நிலை தொடர்ந்து தொடர்ந்து கவலைக்கிடமாக உள்ளதால், அவருக்கு பதில் வேறு ஒருவரை அ.தி.மு.க. அவைத் தலைவராகத் தேர்ந்தெடுக்க வேண்டும் என அதிமுகவினர் இடையே பேசப்பட்டு வருகிறது. இதில், அதிமுகவின் மற்றொரு மூத்தத் தலைவர் மட்டுமின்றி, அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர், செய்தி தொடர்பாளர் என பல்வேறு பதவிகளை வகித்து வரும் பொன்னையன் பெயர், அதிமுகவின் அடுத்த அவைத் தலைவராக வேண்டும் என அதிகளவில் பேசப்பட்டு வருகிறது.
அதிமுக துவங்கிய எம்.ஜி.ஆரின் அமைச்சரவையிலேயே அமைச்சராக இருந்தவர் பொன்னையன். அதுமட்டுமின்றி எம்.ஜி.ஆருக்கு பிறகான ஜெயலலிதா ஆட்சியிலும் அமைச்சர் பதவியை வகித்தவர். ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பி.எஸ். மற்றும் இணை ஒருங்கிணைப்பாளர் இ.பி.எஸ். ஆகியோருக்கும் பொன்னையன் நெருக்கமாக இருந்துவருகிறார்.
அதேவேளையில் இன்னும் சில மூத்தத் தலைவர்களும் இந்த பதவிக்கான போட்டியில் இருப்பதாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.