
இந்தி திணிப்புக்கு எதிராக தனது உறுதியான நிலைப்பாட்டை தமிழ்நாடு தொடர்ந்து பின்பற்றி வருகிறது. மத்திய அரசு கொண்டு வந்த தேசிய கல்வி கொள்கையில் முக்கிய அம்சமான மும்மொழி கொள்கை தமிழ்நாட்டிற்கு ஏற்புடையதல்ல என்றும், தமிழ்நாட்டில் எப்போதும் தமிழ், ஆங்கிலம் என்ற இருமொழி கொள்கை தான் கடைபிடிக்கப்படும் என்றும் பா.ஜ.கவை தவிர அனைத்து தமிழக அரசியல் தலைவர்களும் கூறி வருகின்றனர். அதே சமயம் தமிழ்நாட்டில் தேசியக் கல்விக் கொள்கையை அமல்படுத்தினால் தான், கல்வி தொடர்பான நிதியை தமிழகத்திற்கு விடுவிக்கப்படும் என்று ஒன்றிய பா.ஜ.க அரசு கட்டாயப்படுத்தி வருகிறது. இதனால், திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசுக்கும் ஒன்றிய பா.ஜ.க அரசுக்கும் இடையே மொழி தொடர்பான மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது. இந்த விவகாரம் நாடு முழுவதும் பெரும் விவாதப் பொருளாக மாறி வருகிறது.
தமிழ்நாட்டை தொடர்ந்து, மகாராஷ்டிரா மாநிலத்திலும் இந்தி மொழிக்கு எதிராக குரல் எழுந்து வருகிறது. கடந்த மார்ச் 30ஆம் தேதி மும்பையில் நவநிர்மாண் சேனா கட்சி சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்டத்தில் அக்கட்சித் தலைவர் ராஜ் தாக்கரே பேசிய போது, “நமது மும்பையில், அவர்கள் மராத்தி பேசத் தெரியாது என்று சொல்கிறார்கள். அப்படி சொல்பவர்களின் கன்னத்தில் அறை கொடுப்போம். ஒவ்வொரு மாநிலத்திற்கும் சொந்த மொழி உண்டு, அது மதிக்கப்பட வேண்டும். மும்பையில் மராத்தி மதிக்கப்பட வேண்டும். நீங்கள் இங்கு வசித்து, அந்த மொழியைப் பேசவில்லை என்றால், நீங்கள் தகுந்த முறையில் நடத்தப்படுவீர்கள். நாளையில் இருந்து ஒவ்வொரு வங்கியையும், ஒவ்வொரு நிறுவனத்தையும் சரிபார்க்க வேண்டும். அங்கெல்லாம், மராத்தி மொழி பயன்படுத்தப்படுகிறதா? என்று சரிபார்க்க வேண்டும் .நீங்கள் அனைவரும், மராத்தி மொழிக்காக உறுதியாக இருக்க வேண்டும். தமிழ்நாட்டைப் பாருங்கள், அங்கு இந்தி வேண்டாம் என்று மக்கள் துணிந்து சொல்கிறார்கள், கேரளாவில் கூட” என்று பேசியிருந்தார்.
மராத்தி மொழி மகாராஷ்டிராவில் கட்டாயமாக பேசப்பட வேண்டும் என்று ராஜ் தாக்கரே பேசியிருப்பது அம்மாநிலத்தில் பேசுபொருளாகியுள்ளது. இதனை தொடர்ந்து, மராத்தி மொழி பேசதாவர்கள் மீது அக்கட்சியினர் தாக்குதல் நடத்தி வருகின்றனர். மும்பையில் பணிபுரியும் பாதுகாவலர் ஒருவர் மராத்தி மொழி பேச தெரியாது என்று சொன்னதால், நவநிர்மாண் சேனா கட்சியினர் அவரின் கன்னத்தில் அறைந்து தாக்குதல் நடத்தினர். இது தொடர்பான வீடியோ சமூக ஊடகங்களில் வெளியாகி வைரலானது.

இந்த நிலையில், வங்கி பணப்பரிவர்த்தனைகளில் மராத்தி மொழி பயன்படுத்தாததால் வங்கி ஊழியர் ஒருவர் மீது, நவநிர்மண் சேனா கட்சியினர் தாக்குதல் நடத்தியுள்ளனர். லோனாவாலா பகுதியில் உள்ள மகாராஷ்டிரா வங்கிக்குச் சென்ற நவநிர்மாண் சேனா கட்சியினர், பரிவர்த்தனைகளில் மராத்தி பயன்படுத்த வேண்டும் என்றும் அனைத்து ஊழியர்களும் மராத்தி மொழி பேச வேண்டும் என்று கிளை மேலாளரிடம் கோரிக்கை வைத்தனர். இது தொடர்பாக கலந்துரையாடல் நடைபெற்றது.
அப்போது வங்கி ஊழியர் ஒருவர் குறுக்கிட்டு, இந்தி பயன்படுத்துவதால் வாடிக்கையாளர் சேவை பாதிக்கப்படாது என்று பேசியதாகக் கூறப்படுகிறது. இதில் ஆத்திரமடைந்த நவநிர்மாண் சேனா கட்சியினர், அந்த ஊழியர் மீது தாக்குதல் நடத்தினர். அதன், பின்னர் அவர்கள் அவரைத் தாக்கி மேலாளரின் அறையிலிருந்து வெளியேற்றினர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.