
தூத்துக்குடி மாவட்டம் கழுகுமலை அருகே கெச்சிலாபுரம் வடக்கு தெருவைச் சேர்ந்தவர் குமாரசாமி மகன் செந்தில் மள்ளர்(47). இவர் மள்ளர் மீட்பு கழகத்தின் நிறுவனத் தலைவராக உள்ளார். இவர் மீது சங்கரன்கோவில், திருவேங்கடம், தஞ்சாவூர், கழுகுமலை, சாத்தூர், சென்னை நுங்கம்பாக்கம், திருநெல்வேலி, கோவில்பட்டி காவல் நிலையங்களில் பல வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இந்நிலையில் 40 வயது மதிக்கதக்க பெண் ஒருவர் தன்னிடம் செந்தில் மள்ளர் தவறாக நடக்க முயன்றதாக கூறி காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார். அந்த புகாரில், “நான் கூலி வேலை பார்த்து வருகிறேன். எனக்கு மூன்று மகள்கள் உள்ளனர். நான் எனது தங்கை மற்றும் அவரது மகளுடன் ஒரே வீட்டில் குடியிருந்து வருகிறோம். எனது கணவர் 8 வருடங்களுக்கு முன்பு இறந்து விட்டார். எனது கணவர் இல்லாததால் செந்தில் மள்ளர் கடந்த சில மாதங்களாக அடிக்கடி தகாத முறையில் நடந்து கொள்ளும் வகையில் பேசி வந்தார்.
நான் அந்த மாதிரி பெண் கிடையாது என்று சத்தம் போட்டு வந்தேன். அதை எனது தங்கையிடம் சொல்லிவிட்டு பெரிது படுத்த வேண்டாம் என நினைத்து இருந்துவிட்டு புகார் எதுவும் கொடுக்கவில்லை. இந்நிலையில் 26 ஆம் தேதி வழக்கம்போல நான் வீட்டின் முன்பக்க அறையிலும், எனது தங்கை மற்றும் குழந்தைகள் வலது புறம் உள்ள படுக்கையறையிலும் தூங்கிக் கொண்டிருந்தோம்.வெயில் காரணமாக வீட்டில் உஷ்ணம் அதிகமாக இருந்ததால் காற்றுக்காக வீட்டின் முன்பக்க கதவை லேசாகத் திறந்து வைத்துவிட்டு தூங்கிக் கொண்டிருந்தோம். அப்போது செந்தில் மள்ளர் எனது வீட்டினுள் அத்துமீறி நுழைந்து நான் தனிமையில் இருப்பதைத் தெரிந்து கொண்டு என்னிடம் தனிமையில் இருக்க வேண்டும் என்ற எண்ணத்தில் ஆபாச சைகைகளை காட்டி என்னை நெருங்கினார். உடனே அவரை தள்ளிவிட்டுக் கத்தி கூச்சலிட்டேன்.

இதையடுத்து, செந்தில் மள்ளர் என்னை பார்த்து அசிங்கமாக பேசி, ‘இதை நீங்க யாராவது வெளியே சொல்லி என்னை கேவலப்படுத்தனும்னு நினைச்சீங்கன்னா உங்க நாலு பேரையும் வெட்டி கொன்று விடுவேன். நான் போலீசுக்கு பயந்த ஆளு கிடையாது. ஏற்கனவே ரவுடி தான் இருந்தேன்’ என மிரட்டினார். உடனே அங்கிருந்தவர்கள் சத்தம் போடவும் வாக்குவாதமும் கைகலப்பும் ஏற்பட்டதையடுத்து செந்தில் மள்ளர் அங்கிருந்து தப்பி ஓடி விட்டார். பிறகு இரவு நேரம் என்பதால் வீட்டிலேயே இருந்துவிட்டு அடுத்த நாள் காலையில் 27ஆம் தேதி கழுகுமலை காவல் நிலையத்தில் ஆஜராகி புகார் கொடுத்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த புகாரின் பேரில் கழுகுமலை இன்ஸ்பெக்டர் பத்மாவதி, கோவில்பட்டி டி.எஸ்.பி. ஜெகநாதன் ஆகியோர் மள்ளர் மீட்பு கழகத்தின் நிறுவனத் தலைவர் செந்தில் மள்ளரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தினர். செந்தில் மள்ளர் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சிறையில் அடைத்தனர்.
இதனிடையே பாதிக்கப்பட்ட பெண்ணின் அண்ணன், தம்பிகள் மற்றும் உறவினர்கள் தன்னை தாக்கியதாக செந்தில் மள்ளர் அளித்த புகாரின் பேரிலும் கழுகுமலை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தியாளர் - மூர்த்தி