திமுக தலைமைக் கழகமான அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கடந்த ஜூலை 29 ஆம் தேதி திமுக இளைஞரணி அமைப்பாளர் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சரும், திமுக இளைஞர் அணி செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட கட்சியின் மூத்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
இதில் அமைச்சரும், திமுக இளைஞர் அணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் பேசுகையில், “திமுக இளைஞரணி இன்று ஆதிக்கவாதிகளை விரட்டியடிக்கும் கொள்கைப் பாசறையாகவும், தமிழர்களின் உரிமை காக்கும் போராட்டத்தில் களமாடும் போர்ப்படையாகவும் உள்ளது. கடந்த 2007 ஆம் ஆண்டு திருநெல்வேலியில் நடைபெற்ற இளைஞர் அணியின் முதல் மாநாட்டை முதல்வர் மு.க. ஸ்டாலின் சிறப்புற நடத்தினார். அதே போன்று விரைவில் நடைபெற உள்ள இரண்டாவது மாநில மாநாட்டில் 10 லட்சம் இளைஞர்களைப் பங்கேற்கச் செய்ய உறுதியேற்றுக்கொள்வோம்" எனத் தெரிவித்திருந்தார்.
அதனைத் தொடர்ந்து திமுக தலைமைக் கழகம் சார்பில் அண்மையில் வெளியிட்டு இருந்த அறிவிப்பில், “கடந்த 2007 ஆம் ஆண்டு டிசம்பர் 15 அன்று திமுக வரலாற்றில் முத்திரை பதித்து, திருப்புமுனை ஏற்படுத்திய திமுக இளைஞர் அணி முதல் மாநில மாநாட்டினைத் தொடர்ந்து, வரும் டிசம்பர் மாதம் 17 ஆம் தேதி (17-12-2023) ஞாயிற்றுக்கிழமை அன்று திமுக இளைஞர் அணி இரண்டாவது மாநில மாநாடு சேலத்தில் நடைபெறும்” எனத் தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்நிலையில் சேலத்தில் நடைபெற உள்ள இளைஞர் அணி மாநில மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக நடைபெற்ற புதுக்கோட்டை மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தில் அமைச்சர் உதயநிதி பங்கேற்று உரையாற்றினார். இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தனது டுவிட்டர் பதிவில், “இயக்கத்தின் உயிர் துடிப்பாம் திமுக இளைஞர் அணியின் மாநில மாநாடு சேலத்தில் டிசம்பர் 17 ஆம் தேதி நடைபெறவிருக்கிறது. மாநாட்டு பணிகளை ஒருங்கிணைப்பது தொடர்பாக நடைபெற்ற புதுக்கோட்டை வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட இளைஞர் அணி செயல்வீரர் கூட்டத்தில் பங்கேற்றோம். சேலம் மாநாட்டை கழக வரலாற்றில் இடம்பெற வைக்க, முன்னெடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இளைஞர் அணி நிர்வாகிகளுக்கும், தம்பிகளுக்கும் ஆலோசனைகளை வழங்கினோம். நாட்டை பாசிச சக்திகளிடம் இருந்து மீட்டெடுக்க களமிறங்கியிருக்கும் திமுக தலைவரும் தமிழக முதல்வருமான மு.க. ஸ்டாலினின் கரத்தை வலுப்படுத்த சேலத்தில் ஒன்று திரள்வோம்” என தெரிவித்துள்ளார்.