
கொலை செய்யப்பட்ட கிளாமர் காளி
மதுரை தனக்கன்குளத்தை சேர்ந்த காளீஸ்வரன் என்பவரைக் கடந்த 22ஆம் தேதி (22.03.2025) இரவு 2 பைக்குகளில் வந்த 4 பேர் கொண்ட கும்பல் வெட்டி படுகொலை செய்தனர். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொலை செய்யப்பட்ட காளீஸ்வரன் என்கிற கிளாமர் காளி மதுரை தனக்கன்குளம் திமுக முன்னாள் மண்டல தலைவர் குருசாமியின் உறவினர் மற்றும் ஆதரவாளர் என்று தெரியவந்தது.
திமுக மண்டல செயலாளர் குருசாமிக்கும், அதிமுக முன்னாள் மண்டல தலைவர் ராஜபாண்டியன் உறவினரான ஏ பிளஸ் ரவுடியாக வலம் வந்த வெள்ளை காளி என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து தெரியவந்தது. இந்த மோதல் காரணமாக மதுரை மாநகரில் பல கொலைகள் நடைபெற்றது தெரியவந்தது. வெள்ளை காளி தற்போது சிறையில் இருக்கும் நிலையில், வெள்ளை காளியின் ஏவுதலின் பேரில் இந்த கொலை நடந்ததா என்ற கோணத்தில் போலீசார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் ஏற்கனவே ஜெயக்கொடி, கார்த்திக் உள்பட 7 பேரைத் தனிப்படை போலீசார் கைது செய்திருந்தனர்.

என்கவுண்டர் செய்யப்பட்ட சந்திரபோஸ்
இந்நிலையில் ரவுடி வெள்ளை காளி குழுவில் இருந்த ரவுடி சுபாஷ் சந்திரபோஸ் நேற்று இரவு என்கவுண்டர் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரையில் உள்ள கல்லூரி அருகே இந்த என்கவுண்டர் சம்பவம் நிகழ்ந்துள்ளது. இந்நிலையில் என்கவுண்டர் செய்யப்பட்ட சந்திரபோஸின் உடலை வாங்க மறுத்து அவரது உறவினர்களும் குடும்பத்தாரும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 'உரிய விசாரணை நடைபெறும் வரை உடலை வாங்க மாட்டோம். அண்மையில் தான் ஜாமீனில் வெளியே வந்த சந்திரபோஸுக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடுகள் நடந்து வந்தது. திருந்தி வாழ்ந்த என்னுடைய மகனை என்கவுண்டர் செய்துள்ளனர். கிளாமர் காளி கொல்லப்பட்டதற்கும் என் மகனுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. சம்பவத்தின் போது சந்திரபோஸ் வீட்டு விசேஷத்தில் இருந்ததற்கான ஆதாரங்கள் இருக்கிறது. கொலை செய்தவர்களை பிடிக்காமல் என் மகனை ஓடவிட்டு சுட்டுள்ளார்கள். எனவே காவல்துறையினர் எங்கள் மகனை என்கவுண்டர் செய்ததற்கான காரணத்தை தெரிவிக்காமல் உடலை வாங்க மாட்டோம்' என சந்திரபோஸின் தாய் தெரிவித்துள்ளார்.