Skip to main content

வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா; ஆ.ராசா எம்.பி. ஆவேச பேச்சு!

Published on 02/04/2025 | Edited on 02/04/2025

 

Waqf Board Amendment Bill A Raja MP passionate speech

நாடாளுமன்ற மக்களவையில் வக்ஃப் வாரிய சட்டத்திருத்த மசோதாவை, நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜுஜூ இன்று (02.04.2025) தாக்கல் செய்தார். இந்த மசோதாவிற்கு, இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகள் சார்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த மசோதா மீதான அனல் பறக்கும் விவாதம் மக்களவையில் இன்று நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக திமுக துணைப் பொதுச்செயலாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா மக்களவையில் பேசுகையில், “தமிழ்நாட்டில் இந்து அறநிலையத் துறை நிர்வகிக்கும் கல்லூரிகளில் இஸ்லாமியர்களை ஆசிரியர்களாக நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்து முன்னணி மற்றும்  ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் அறிக்கை விட்டனர். அவர்களின் ஆதரவாளர்கள் தான் தற்போது வக்ஃப் வாரியத்தில் இஸ்லாமியர்கள் அல்லாதவர்களையும் உறுப்பினர்களாகச் சேர்க்கும் சட்டத்திருத்தத்தைக் கொண்டு வந்துள்ளனர். மதச்சார்பின்மை பற்றி நீங்கள் (பாஜக) எங்களுக்குப் பாடம் எடுக்க வேண்டாம். ஒன்றிய அரசுக்கு மதம் மட்டும்தான் பிரச்சினையாக உள்ளது. மதத்தில் அரசியலைக் கலக்காதீர்கள். அது இந்திய ஒற்றுமைக்கே ஆபத்தாக முடியும்.

ஒட்டுமொத்த வக்ஃப் சொத்துக்களையும் ஒன்றிய பாஜக அரசு அபகரிக்க முயற்சிக்கிறது. வக்ஃப் சொத்துக்கள் என அறிவிக்கப்பட்டதை, அவை வக்ஃப் சொத்துக்கள் தானா? என்று  வரையறுக்கும் சட்டப்பிரிவு அபத்தமானது. இந்த சட்டப்பிரிவின் அதிகாரம் முழுவதும் அரசிடம் இருப்பது மிகவும் ஆபத்தானது. வக்ஃப் வாரிய மசோதா விவகாரத்தில் உள்ள முழுமையான உண்மைகளை மறைத்து ஒன்றிய அமைச்சர் கிரண் ரிஜிஜூ திருத்த மசோதாவைத் தாக்கல் செய்திருக்கிறார். நாடாளுமன்றத்தில் ஒன்றிய அமைச்சர் தெரிவித்த கருத்துகளும், கூட்டுக்குழுவின் ஆவணங்களில் சொல்லப்பட்டிருப்பவையும் ஒன்றாக இல்லை. அவ்வாறு ஒன்றாக இருப்பதை நிரூபித்தால் என்னுடைய எம்.பி. பதவியை ராஜினாமா செய்யவும் தயாராக இருக்கிறேன்.

வக்பு சட்டத் திருத்த மசோதா மத சுதந்திரத்துக்கும் அரசியல் சாசனத்துக்கும் எதிராக உள்ளது. கடந்த 1970ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட குழுவின் பரிந்துரை அடிப்படையில் 1984ஆம் ஆண்டு வக்பு சட்டம் கொண்டுவரப்பட்டது.அதன் பின்னர் 1995ஆம் ஆண்டு இஸ்லாமியர்களின் கோரிக்கையின் படி சட்டத்தில் இரண்டு திருத்தங்கள் கொண்டுவரப்பட்டது. மேலும் 2013ஆம் ஆண்டும் பல பரிந்துரைகள் வழங்கப்பட்டு சட்டத்தில் சில திருத்தங்கள் கொண்டு வரப்பட்டது. ஆனால் தற்போது எந்தப் பரிந்துரையின் அடிப்படையில் புதிய திருத்தங்கள் கொண்டுவரப்பட்டுள்ளன. 5 ஆண்டுகள் இஸ்லாம் மதத்தைப் பின்பற்றினால்தான் நன்கொடை அளிக்க முடியும் என்ற சட்டத்திருத்தம் நேர்மையாக நன்கொடை அளிப்பவர்களுக்கு எதிராக உள்ளது. 

சார்ந்த செய்திகள்