Skip to main content

பெண் காவலரை ஆபசமாக பேசி கெத்து காட்டிய ரவுடி; காப்பு மாட்டிய போலீஸ்!

Published on 27/03/2025 | Edited on 27/03/2025

 

Rowdy arrested for misbehaved female police officer near Kovilpatti

கோவில்பட்டி போஸ் நகரைச் சேர்ந்தவர் கருப்பசாமி மகன் மாணிக்க ராஜா (45). இவர் மீது கோவில்பட்டி கிழக்கு மற்றும் மேற்கு  காவல் நிலையங்கள், திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, விருதுநகர்  உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் உள்ள காவல் நிலையங்களில் கொலை, கொள்ளை, கொலை முயற்சி, கட்ட பஞ்சாயத்து ஆள் கடத்தல் என 50க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் பதிவாகி உள்ளன. இதில் 30க்கும் மேற்பட்ட வழக்குகள் நிலுவையில் உள்ளது.

ஏ ப்ளஸ் கேட்டகிரி ரவுடியான மாணிக்க ராஜா நேற்று மாலை கோவில்பட்டி அண்ணா பேருந்து நிலையம் சாலையில் கிருஷ்ணன் கோவில் சந்திப்பு அருகே நம்பர் பிளேட் இல்லாத புல்லட்டில் ஹெட் போன் காதில் மாட்டியபடி பேசிக்கொண்டே  வந்துள்ளார். கிருஷ்ணன் கோயில் ரவுண்டான சந்திப்பு பகுதியில் பணியில் இருந்த போக்குவரத்து பெண் காவலர் இந்திரா காந்தி, மாணிக்க ராஜாவை தடுத்து நிறுத்தியுள்ளார். அத்துடன், “ஏன் செல்போனில் பேசிக்கொண்டே வண்டி ஓட்டுகிறீர்கள். செல்லில் பேசிக்கொண்டே வாகனத்தை ஓட்டாதீர்கள்..” என்று பெண் காவலர் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அதற்கு மணிக்கராஜா, “நான் யார் தெரியுமா?” என்று பைக்கில் உட்கார்ந்துகொண்டே கேட்ட மாணிக்க ராஜா, “ ஹெட்செட் காதில் மாட்டி போன் பேசிக்கொண்டு வாகனத்தை ஓட்டக்கூடாது என எந்த சட்டத்தில் உள்ளது” என்று அறுவறுக்கத்த வகையில் ஆபாசமாக திட்டியுள்ளார். பின்னர் அங்கிருந்து புல்லட்டில் புறப்பட்டபோது தடுத்து நிறுத்திய காவலர் இந்திரா காந்தியின் கையை தட்டி விட்டுள்ளார்.  இதில் அவரது கையில் இருந்த மைக் சாலையில் விழுந்து சேதமடைந்துள்ளது.

அதன் பிறகும், “நானே பெரிய ரவுடி. போலீஸ்ன்னு பார்க்க மாட்டேன். உன்னை கொன்னு போட்ருவேன்னு” என்று கொலை மிரட்டல் விடுத்துவிட்டு  ரவுடி மாணிக்க ராஜா அங்கிருந்து கிளம்பிச் சென்றிருக்கிறார். இதுகுறித்து பெண் காவலர் இந்திரா காந்தி கோவில்பட்டி டிராபிக் எஸ்.ஐ. செல்வகுமாருக்கு தகவல் தெரிவித்துள்ளார். செல்வகுமார் உடனடியாக கோவில்பட்டி மேற்கு காவல் நிலையத்தை தொடர்பு கொண்டு மாணிக்க ராஜா குறித்து விசாரித்துள்ளார். டிராபிக் எஸ்.ஐ. விசாரிக்கும் தகவலை மேற்கு காவல் நிலைய போலீசார் ரவுடி மாணிக்க ராஜாவுக்குக் கொடுத்துள்ளனர்.

அடுத்த சில நிமிடங்களிலேயே ரவுடி மாணிக்கராஜா ட்ராபிக் எஸ்.ஐ. செல்வகுமாரை தொடர்பு கொண்டு, “சார் மாணிக்க ராஜா பேசுறேன். சாரி, தெரியாமல் நடந்து விட்டது. புல்லட்டின் கை பிடியில் இருந்து கிளர்ச்சை விட்டு விட்டேன். அதனால் எதிர்பாராத விதமாக பெண் போலீஸ் கையில் இருந்த மைக் கீழே விழுந்து விட்டது..” என சமாதானம் பேசி உள்ளார். அப்போது எஸ்.ஐ. செல்வகுமார், “நீங்கள் ஸ்டேஷனுக்கு வாங்க, பேசிக் கொள்ளலாம்..” என்று வரவழைத்துள்ளார்.

இதனிடையே சம்பந்தப்பட்ட பெண் காவலர் இந்திரா காந்தி அப்பகுதியில் பதிவாகி இருந்த சிசிடிவி கேமரா பதிவுகளுடன் காவல் நிலையத்துக்கு வந்துள்ளார். சிசிடிவி கேமரா காட்சிகளை பார்த்தபோது பெண் காவலர் இந்திரா காந்தியை பணி செய்ய விடாமல் தடுத்து ஆபாசமாக பேசி கொலை மிரட்டல் விடுத்ததுள்ளதும் கையை தட்டி விட்டதும் தெளிவாக பதிவாகி இருந்தது. இந்த விவகாரம் கோவில்பட்டி டிஎஸ்பி ஜெகநாதனுக்கு சென்றதையடுத்து வழக்குப்பதிவு செய்து நடவடிக்கை எடுக்க கிழக்கு காவல் நிலையத்துக்கு உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து சமாதானம் பேச டிராபிக் ஸ்டேஷனுக்கு வந்த ரவுடி மாணிக்க ராஜாவை போலீசார் மடக்கி கிழக்கு காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அங்கு அவர் மீது  நான்கு பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்த போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

ஏ பிளஸ் கேட்டகிரி ரவுடி மாணிக்க ராஜாவுக்கு ஆதரவாக ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகளை சேர்ந்த பல முக்கிய புள்ளிகளும்,  போலீஸ் டிபார்ட்மெண்ட் ஆட்களுமே ரெக்கமெண்ட் செய்து மீட்டு செல்ல முனைப்பு காட்டிய நிலையில் பெண் காவலரிடம் கெத்து காட்டிய ரவுடி மாணிக்க ராஜாவுக்குக் காப்பு மாட்டி சிறைக்கு அனுப்பியிருக்கிறது டிஎஸ்பி ஜெகநாதன் தலைமையிலான போலீஸ் டீம்.

செய்தியாளர் - மூர்த்தி

சார்ந்த செய்திகள்