
தமிழக சட்டப்பேரவையில் 2025 - 2026ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையைத் தமிழக நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கடந்த மார்ச் மாதம் 14ஆம் தேதி (14.03.2025) தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகின. இதனையடுத்து வேளாண் பட்ஜெட்டை, வேளான் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் கடந்த 15ஆம் தேதி (15.03.2025) தாக்கல் செய்தார். இதனைத் தொடர்ந்து பட்ஜெட் மீதான விவாதம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து துறை ரீதியான மானியக் கோரிக்கை நடைபெற்று வருகிறது.
இத்தகைய சூழலில் தான் சட்டப் பேரவையில் அரசினர் தனித் தீர்மானத்தைத் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (02.04.2025) முன்மொழிந்தார். அதில், “கச்சத்தீவைத் திரும்பப் பெறுவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் ஒன்றிய அரசு உடனடியாக மேற்கொள்ள வேண்டும், கைது செய்யப்பட்ட மீனவர்கள் மற்றும் மீன்பிடி படகுகளை உடனடியாக விடுவிக்க வேண்டும்” எனத் தெரிவிக்கப்பட்டது. இந்த தீர்மானத்தை முன்மொழிந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உரையாற்றுகையில், “தமிழ்நாட்டைச் சார்ந்த இந்திய மீனவர்களின் நலன் கருதி, அனைத்துக் கட்சிகளும் இந்தத் தீர்மானத்தை ஒருமனதாக நிறைவேற்றித் தர வேண்டுகிறேன்” எனத் தெரிவித்தார்.
இதனைத் தொடர்ந்து இந்த தனித் தீர்மானத்திற்கு அதிமுக, பாஜக என அனைத்து கட்சியும் ஆதரவு அளித்தனர். இதனையடுத்து சபாநாயகர் அப்பாவு இந்த தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டதாக அறிவித்தார். இதற்கிடையே இந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தின் போது தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், சட்டமன்ற உறுப்பினருமான கு. செல்வப்பெருந்தகை ஒரு சில கருத்துகளைப் பகிர்ந்தார்.
அப்போது அதிமுகவின் மூத்த தலைவரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன், “முன்னாள் முதல்வர் ஜெயலலிதா குறித்து செல்வப்பெருந்தகை தவறாக விமர்சித்துப் பேசுகிறார்.இதனை அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் பார்த்துக் கொண்டிருக்கலாமா?. எனவே அனைவரும் எழுந்து எதிர்ப்பு தெரிவியுங்கள்” எனக் கூறினர். இதனையடுத்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து செல்வப்பெருந்தகை பேசிய கருத்துகள் அவைக் குறிப்பில் இருந்து நீக்கப்பட்டன.