
இசையமைப்பாளர் ஜி.வி பிரகாஷ் மற்றும் பாடகி சைந்தவி இருவரும் காதலித்து 2013ஆம் ஆண்டு திருமணம் செய்துகொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருக்கிறது. இந்த சூழலில் இருவரும் தங்களது திருமண வாழ்க்கையில் இருந்து பிரிவதாக கடந்த ஆண்டு மே மாதம் அறிவித்தனர். பின்பு இருவரும் திருமண வாழ்க்கையில் பிரிந்திருந்தாலும் ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் பரஸ்பர மரியாதை அப்படியே நீடிக்கும் எனக் கூறியிருந்தனர்.
இதையடுத்து ஜி.வி பிரகாஷ் சைந்தவியைப் பிரிவதற்கு அவருடன் பேச்சுலர் படத்தில் இணைந்து நடித்த நடிகை திவ்ய பாரதிதான் காரணம் எனப் பரவலாகச் சொல்லப்பட்டது. மேலும் ஜி.வி. பிரகாஷுடன் திவ்ய பாரதி டேட்டிங் செய்து வருவதாகவும் கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டது. இதனிடையே தொடர்ந்து ஜி.வி பிரகாஷும் திவ்ய பாரதியும் கிங்ஸ்டன் படத்தில் மீண்டும் இணைந்து நடித்திருந்தனர். கடந்த மாத ஆரம்பத்தில் இப்படம் வெளியாகியிருந்தது. அப்போது புரொமோஷனில் ஈடுபட்ட ஜி.வி.பிரகாஷ் திவ்ய பாரதி குறித்தான தகவலை மறுத்திருந்தார்.
இதையடுத்து ஜி.வி.பிரகாஷ் மற்றும் சைந்தவி இருவரும் கடந்த மாத இறுதியில் விவாகரத்து கோரி நீதி மன்றம் சென்றனர். அப்போது மனுத் தாக்கல் செய்துவிட்டு ஒரே காரில் திரும்பிச் சென்றனர். இந்த நிலையில் திவ்ய பாரதி தற்போது ஜி.வி.பிரகாஷூடன் தொடர்பு படுத்தி வந்த தகவலை மறுத்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “ஒரு குடும்பத்தின் தனிப்பட்ட விஷயத்தில் என் பெயர் தேவையில்லாமல் இழுக்கப்பட்டுள்ளது. ஜி.வி.பிரகாஷின் குடும்பப் பிரச்சினைகளுக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. வெளிப்படையாகச் சொன்னால், நான் ஒருபோதும் ஒரு நடிகருடன் டேட்டிங் செய்ததில்லை. குறிப்பாக ஒரு திருமணமான ஆணுடன் நிச்சயம் டேட்டிங் செய்ததில்லை.

ஆதாரமற்ற வதந்திகளுக்கு கவனம் கொடுக்க தேவையில்லை என நான் இதுவரை எந்த பதிலும் தராமல் அமைதியாக இருந்தேன். இருப்பினும், அந்த வதந்திகள் எல்லைகளை கடந்து சென்றிருக்கிறது. ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளால் என் நற்பெயருக்குக் களங்கம் ஏற்படுவதை நான் அனுமதிக்க மாட்டேன். நான் ஒரு வலிமையான, சுதந்திரமான பெண். நெகட்டிவிட்டியை பரப்புவதற்குப் பதிலாக, ஒரு சிறந்த உலகத்தை உருவாக்குவதில் கவனம் செலுத்துவோம். எனது எல்லைகளை மதிக்கவும். இந்த விஷயத்தில் இதுவே எனது முதல் மற்றும் இறுதி விளக்கம்” என்று சற்று கோவமாக குறிப்பிட்டுள்ளார்.