புதிய நாடாளுமன்ற கட்டட திறப்புவிழா குறித்து காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே மற்றும் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவாலின் கருத்துக்கள் தெரிவித்ததற்கு எதிராக அவர்கள் மேல் புகார் அளிக்கப்பட்டு வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
புதிய நாடாளுமன்ற திறப்பு விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு அழைக்கப்படாதது குறித்து அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மல்லிகார்ஜூன கார்கே தங்களது கருத்துக்களை தெரிவித்திருந்தனர். அதில் கெஜ்ரிவால் தனது ட்விட்டர் பதிவில், “ஸ்ரீராமர் கோவிலுக்கு அடிக்கல் நாட்ட அப்போதைய ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த்தை மோடி அழைக்கவில்லை. புதிய பாராளுமன்ற கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டவும் ராம்நாத் கோவிந்த்தை மோடி அழைக்கவில்லை. இப்போது தற்போதைய ஜனாதிபதி திரௌபதி முர்முவின் கைகளால் புதிய பாராளுமன்ற கட்டட திறப்பு விழாவைக் கூட செய்யவில்லை. நாடு முழுவதும் உள்ள எஸ்.சி., எஸ்.டி. மக்கள், எங்களை தீய சகுனமாகக் கருதுகிறீர்களா என்று கேட்கிறார்கள். அதனால்தான் எங்களை அழைக்கவில்லையா?” கேள்வி எழுப்பியிருந்தார்.
அதேபோல் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “தேர்தல் காரணங்களுக்காக மட்டுமே தலித் மற்றும் பழங்குடியின சமூகங்களில் இருந்து இந்தியக் குடியரசுத் தலைவர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள் என்பதை மோடி தலைமையிலான அரசு உறுதி செய்வது போல் தெரிகிறது. புதிய நாடாளுமன்ற அடிக்கல் நாட்டு விழாவுக்கு முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் அழைக்கப்படவில்லை. இந்திய குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு புதிய நாடாளுமன்ற கட்டிடம் திறப்புக்கு அழைக்கப்படவில்லை.
இந்தியாவின் நாடாளுமன்றம் என்பது இந்திய குடியரசின் உச்சபட்ச சட்ட அமைப்பாகும். குடியரசுத் தலைவர், அதன் உயர்வான அரசியலமைப்பு அதிகாரம் கொண்டவர். அவர் மட்டுமே அரசாங்கம், எதிர்க்கட்சிகள் மற்றும் ஒவ்வொரு குடிமக்களையும் பிரதிநிதித்துவப்படுத்துகிறார். அவரே இந்தியாவின் முதல்குடிமகன். புதிய நாடாளுமன்ற கட்டிடத்தை அவர் திறந்து வைப்பது என்பது ஜனநாயக மதிப்புகள், அரசியலமைப்பு உரிமைகள் ஆகியவற்றைக் காப்பதற்கான அரசின் அடையாளமாகும். மோடி அரசு தொடர்ந்து உரிமைகளுக்கு மதிப்பளிப்பதில்லை. குடியரசுத் தலைவரின் அலுவலகம் பெயரளவுக்கு மட்டுமே செயல்படும் ஒன்றாக இந்த பாஜக - ஆர்எஸ்எஸ் ஆட்சியில் மாற்றப்பட்டுள்ளது” என கூறியிருந்தார்.
இந்நிலையில் அரவிந்த் கெஜ்ரிவால் மற்றும் மல்லிகார்ஜூன கார்கேவின் பதிவுகள், அவர்களது தனிப்பட்ட அரசியல் நோக்கத்திற்காக சமூகங்கள் மற்றும் மக்களிடையே பகையை வளர்க்கும் நோக்கத்துடன் வெளியிடப்பட்டுள்ளதாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்கள் மீது அவர்கள் மீது ஐபிசி 34, 121, 135A, 505 என்ற நான்கு பிரிவுகளின் கீழ் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.