ஒடிசா மாநிலத்தில் நேற்று முன்தினம் இரவு மூன்று ரயில்களுக்கு இடையே ஏற்பட்ட விபத்தின் காரணமாக தற்போது வரை 294 பேர் இறந்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. காயமடைந்தவர்களுக்கு தொடர் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. இதனிடையே விபத்தில் சிக்கிய தமிழர்களை தமிழ்நாட்டிற்கு மீட்டுக்கொண்டு வரும் பணியும் வேகமாக நடந்து வருகிறது. ரயில் விபத்தில் பாதிக்கப்பட்டவர்கள் சிறப்பு ரயில் மூலம் சென்னை வந்தடைந்தனர்.
இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது பேசிய அவர், “நடந்த நிகழ்வு அரசியல் என்று நாம் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என சொல்லவில்லை. ஆட்சியாளர்களின் அலட்சியம் காரணமாக உள்ளது என தொழில்நுட்ப வல்லுநர்களே கருத்து சொல்கிறார்கள். காவச் என்கிற பாதுகாப்பு கருவி முறையாக பயன்படுத்தி இருந்தால் இது தவிர்க்கப்பட்டு இருக்கும் என்கிற கருத்தும் சொல்லப்படுகிறது.
இவற்றை எல்லாம் கவனிக்க அவர்களுக்கு நேரம் இல்லை. வெறுப்பு அரசியலை செய்வதற்குத்தான் அவர்களுக்கு நேரமுள்ளது. ஜெய் ஸ்ரீ ராம் முழக்கத்தை எழுப்புவதற்குத்தான் அவர்களுக்கு நேரம் உள்ளது. மக்களது பாதுகாப்பில் கவனம் செலுத்த இவர்களுக்கு நேரம் இல்லை என்பதை எப்படி சுட்டிக் காட்டாமல் இருக்க முடியும்.
தமிழ்நாடு முதலமைச்சர் உடனடியாக நடவடிக்கைகளை எடுத்துள்ளார். கலைஞரின் நூற்றாண்டு நிகழ்வுகளுக்காக ஏற்பாடுகள் செய்திருந்த அனைத்து நிகழ்வுகளையும் ரத்து செய்துவிட்டு துக்க நாளாக அதை கடைப்பிடிக்கும் படி அறிவித்தார். அதுமட்டுமின்றி அமைச்சர்களையும் அதிகாரிகளையும் அனுப்பி வைத்து ஒடிசா மாநில அரசுடன் இணைந்து செயல்படுவதற்கான வழிகாட்டுதலையும் தந்துள்ளார். நமது முதல்வரின் நடவடிக்கைகள் ஆறுதலாக இருக்கிறது, அவருக்கு எனது பாராட்டுகள்” என்றார்.