திமுகவின் ’ஒன்றிணைவோம் வா’ செயல்திட்டத்தில் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் தமிழக அரசால் மட்டுமே தீர்க்க முடியும் என்கிற பிரச்சனைகளை மனுவாக தயாரித்தது திமுகவின் வியூக வல்லுனர் குழுவான ஐ-பேக் டீம் ! இதனை திமுக தலைவர் மு.க.ஸ்டாலின்னின் பார்வைக்கு கொண்டு சென்றதை அடுத்து, மாவட்ட ஆட்சியர்களிடம் அதனை கோரிக்கை மனுக்களாக கொடுங்கள் என கட்சி மா.செ.க்களுக்கு உத்தரவிட்டது திமுக தலைமை.

மேலும், முதல்வர் எடப்பாடியின் கவனத்துக்கும் இதனை கொண்டு செல்லும் வகையில், தலைமைச் செயலாளர் சண்முகத்தை திமுக எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு. தயாநிதிமாறன், டாக்டர் கலாநிதி, தமிழச்சி தங்கபாண்டியன் ஆகியோர் சந்தித்தனர். அந்த சந்திப்பில், தலைமைச்செயலாளர் தங்களை அவமதித்துவிட்டதாக பத்திரிகையாளர்களிடம் டி.ஆர்,பாலுவும் தயாநிதியும் ஆவேசப்பட்டனர். மூன்றாம்தர மக்கள், தாழ்த்தப்பட்டவர்கள் என்கிற வார்த்தைகளை பயன்படுத்தினார் தயாநிதி.
தயாநிதியின் அத்தகைய பேச்சு சர்ச்சையானது. தலித் அரசியல் கட்சிகளின் தலைவர்கள், அமைப்புகள் என பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்தனர். காவல்துறையில் புகாரும் கொடுக்கப்பட்டது. இந்த நிலையில், தமிழக பாஜகவின் தலைவராக இருக்கும் முருகன், ஏற்கனவே தாழ்த்தப்பட்டோர் ஆணையத்தின் துணை தலைவராக இருந்தவர். தயாநிதியின் பேட்டியை கவனித்த அவர், இது குறித்து தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களிடம் விவாதித்தார். தயாநிதி மீது வன்கொடுமை சட்டத்தில் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி போலீஸில் புகார் கொடுக்க வேண்டும் என முருகன் உட்பட பாஜக தலைவர்கள் தீர்மானித்தனர். அதனடிப்படையில் பாஜக பிரமுகர்கள் நரேந்திரன், ராகவன், சுப்பிரமணிய பிரசாத் ஆகியோர் சென்னை கமிஷனர் ஏ.கே.விஷ்வநாதனை சந்தித்து புகார் கொடுத்தனர்.

இந்தநிலையில், திமுக தலைமை கண்டித்ததன் பேரில், தனது ட்விட்டர் பக்கத்தில் வருத்தம் தெரிவித்திருந்தார் தயாநிதிமாறன். ஆனாலும், தமிழக பாஜகவினர் இதனை ஏற்க தயாராக இல்லாத நிலையில், தமிழகம் முழுவதும் தயாநிதிக்கு எதிராகப் புகார் கொடுக்கும் நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. வன்கொடுமை சட்டத்தில் தயாநிதி கைது செய்யப்படும் வரை அவருக்கு எதிரான இந்த பிரச்சனை நீர்த்துப்போய்விடக் கூடாது என நினைக்கிறாராம் பாஜக தலைவர் முருகன். இதனால், ’’திமுக எம்.பி.க்களுக்கு எதிராக வரிந்து கட்டுவதில் அவர் தீவிரம் காட்டி வருகிறார்’’ என்கிறார்கள் தமிழக பாஜகவினர்.