கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 16ந் தேதி கோவில் நகரத்தில் தலைவிரித்தாடும் கஞ்சா! புகார் + கொலை மிரட்டல் = தற்கொலை என்கிற தலைப்பில் நக்கீரன் இணைதளத்தில் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
அதில் குறிப்பாக ஸ்ரீரங்கம் சந்துரு என்கிற இவர் பெரிய கஞ்சா வியாபாரி தனக்கு கீழ் அடி பொடி பசங்களை வைத்துக்கொண்டு கஞ்சா தொழிலைச் சிறப்பாகவும், வெளிநாட்டிலிருந்து யாரேனும் ஸ்ரீரங்கம் வந்தால் அவர்களை மிரட்டி பணம் பறிப்பது என்பதை முழு நேரத் தொழிலாகவும், பகுதிநேரமாக உதயநிதி ரசிகர் மன்றம் என்கிற போர்வையில் மகேஷ் பொய்யா மொழிக்கு மிகவும் நெருக்கமானவர் என்கிற பிம்பத்தை வைத்து போலீசை சரி பண்ணி வைத்திருக்கிறார் என்கிறார்கள் என்று குறிபிட்டிருந்தோம்.
இந்த இடைப்பட்ட 7 மாதங்களில் ஸ்ரீரங்கத்தை சுற்றி கொலைகள், கஞ்சா, அடிதடி, தகராறு என ஏகப்பட்ட பிரச்சனைகள் நடந்து கொண்டே இருந்தாலும் ஸ்ரீரங்கம் சந்துருவை நெருங்கவே இல்லை.
இந்த நிலையில் சமீபத்தில் ஸ்ரீரங்கத்திற்கு ஸ்டாலின் வருகை தரும் அன்று நள்ளிரவில் ஸ்ரீரங்கம் பகுதியில் வீடுபு குந்து அரிவாலுடன் சென்று தாக்குவது வீடியோவில் அப்பட்டமாக தெரிந்தது. இந்த நிலையில் ஸ்ரீரங்கம் பகுதிக்கு ஏ.சி.யாக இராமசந்திரன் பதவி ஏற்றவுடன் சந்துருவின் அத்தனை அடாவடி பிரச்சனைகளையும் தூசு தட்டி விசாரணையில் இறங்கினார்.
விளைவு... சந்துரு மீது கொலை, திருட்டு மற்றும் வழிப்பறி என ஸ்ரீரங்க காவல்நிலையத்தில் மட்டும் 23 வழக்குகள், உறையூர் காவல்நிலையத்தில் 4 வழக்கும், எடமலைப்பட்டிபுதூர் காவல்நிலையத்தில் 1 வழக்கும் கண்டோன்மென்டில் 1 வழக்கும், தில்லைநகரில் 2 வழக்கும், தஞ்சாவூரில் 1 வழக்கும், விராலிமலையில் 1 வழக்கு உள்ளிட்ட 33 வழக்குகள் உள்ளது என பட்டியல் தாயாரிக்கப்பட்டு இதன் அடிப்படையில் குண்டாஸ் வழக்கு பாய்ந்து தற்போது திருச்சி சிறையில் இருக்கிறார்.