விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதியில் திமுக சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர் புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் 6 ஆம் தேதி (06.04.2024) உடல்நலக் குறைவால் காலமானார். இவரது மறைந்ததைத் தொடர்ந்து விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இத்தகைய சூழலில் தான் விக்கிரவாண்டி சட்டமன்றத் தொகுதிக்கு ஜூலை 10 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறும் எனத் தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. அதன்படி நேற்று முன்தினம் (14.06.2024) விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் தொடங்கியது.
இந்த இடைத்தேர்தலில் தி.மு.க சார்பில் அன்னியூர் சிவா, நாம் தமிழர் கட்சி சார்பில் அபிநயா பா.ஜ.க கூட்டணியில் உள்ள பா.ம.க சார்பில் அக்கட்சியின் மாநிலத் துணைத் தலைவர் சி. அன்புமணி ஆகியோர் போட்டியிட உள்ளனர். அதே சமயம் அதிமுக இந்த இடைத்தேர்தலைப் புறக்கணிக்கிறது எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த அறிவிப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியிருந்தது.
இந்நிலையில் முன்னாள் மத்திய அமைச்சரும், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது எக்ஸ் சமூக வலைத்தளத்தில், “விக்கிரவாண்டி இடைத்தேர்தலைப் புறக்கணிக்கும் அதிமுகவின் முடிவு, தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) வேட்பாளரின் (பாமக) தேர்தல் வெற்றி வாய்ப்பை எளிதாக்கும் வகையில் மேலதிகாரிகளிடம் இருந்து உத்தரவு பெற்றுள்ளது என்பதற்குத் தெளிவான சான்று இது. இந்த தேர்தலில் பாஜக மற்றும் அதிமுக இரண்டு கட்சிகளும் பினாமி (பாமக) மூலம் போரிடுகின்றன. இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடும் திமுக வேட்பாளரின் மகத்தான வெற்றியை அதிமுக உறுதி செய்ய வேண்டும்” எனக் குறிப்பிட்டுள்ளார்.