"நீட்" தேர்வு விவகாரத்தில் எந்த குழப்பமும் இல்லை. நீட்டாக (அதாவது சரியாகவாம்) இருப்பதாக மீண்டும் குழப்பியுள்ளார் பள்ளி கல்வித்துறை அமைச்சரான கே.ஏ.செங்கோட்டையன்.
ஈரோடு மாவட்டத்தில் நடைபெற்றுவரும் வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்தான ஆய்வு கூட்டம் வணிக வரி மற்றும் பதிவுத்துறை முதன்மை செயலாளர் பாலச்சந்திரன் தலைமையில் இன்று மாவட்ட கலெக்டர் ஆபீஸில் நடந்தது. கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்ங்ர் செங்கோட்டையன் பிறகு செய்தியாளர்களிடம் பேசினார்.
"தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வழிகாட்டுதலின் படி முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நிறைவேற்றி வருகிறார். சென்ற மூன்று மாதங்களுக்கு முன் ஈரோடு மாவட்டத்தில் ஆய்வுப்பணிகள் நடந்தது. ஈரோடு மாவட்டத்தில் வளர்ச்சி பணிகள் 90 சதவீதம் முடியுற்றுள்ளது. மீதமுள்ள பணிகளை விரைவுபடுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். ஆய்வு கூட்டத்தில் என்னென்ன பணிகளை விரைவுபடுத்த வேண்டும் என எம்எல்ஏ.,க்கள் யோசனை தெரிவித்தனர்.
புதிய திட்டங்களை கொண்டு வருவது பற்றி பரிசீலித்துள்ளோம்" என்ற அவர், "ஒன்றாம் வகுப்பு முதல் 5 ம் வகுப்பு ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் முறை அமலாவது தொடர்பாக பரிசீலனையில் உள்ளது. 6 ம் வகுப்பு முதல் மேல்நிலைப்பள்ளி வரையிலான ஆசிரியர்களுக்கு பயோமெட்ரிக் செயல்படுத்தப்பட்டுள்ளது. நிதி பற்றாக்குறையால் நிதித்துறை செயலாளருக்கு கோப்பு அனுப்பி உள்ளோம். நிதி கிடைத்தவுடன் செயல்படுத்தப்படும்.
ஆசிரியர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டத்தில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 1, பிளஸ் 2 ஆசிரியர்கள் என இல்லாமல் அனைத்து ஆசிரியர்களுக்கும் லேப் டாப் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. 28 ஆயிரம் ஆசிரியர்களுக்கு இதுவரை வழங்கப்பட்டுள்ளது. மீதமுள்ள ஆசிரியர்களுக்கு ஆண்டு தோறும் நிதிக்கு தகுந்தற்போல வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். நீட் தேர்வு பயிற்சி நீட்டாக நடக்கிறது." இவ்வாறு அவர் கூறினார்.
பிறகு செய்தியாளர்கள் "அ.தி.மு.க.விமர்சனத்திற்கு பதில் தராமல் கூட்டணி தர்மத்திற்காக அமைதியாக உள்ளதாக பா.ஜ.க. பொன் ராதாகிருஷ்ணன் கூறியுள்ளாரே.. என கேள்வி எழுப்ப கூட்டத்தில் இருந்த ர.ர. ஒருவர், "ஏப்பா ரிப்போட்டர் அண்ணன் அரசியல் பேச மாட்டாருனு தெரியுமல்ல, அப்புறம் எதுக்கு மைக்க வாயிகிட்டேயே நீட்றீங்க... இந்த வாயில இருந்து வேற எந்த வார்த்தையும் வராது லேப்டாப், ஜாமன்ட்ரி பாக்ஸ், இலவச சைக்கிள், கல்விப் புரட்சி இது மட்டும் தான் வரும் எல்லாத்தையும் பேசத்தான் ஆல் இன் ஆல் அழகுராஜா அண்ணன் ஜெயக்குமார் இருக்காரு அங்க போங்க..." என கிண்டலாக நையாண்டி செய்தார். இதை காதில் வாங்கி வாய் விட்டு சிரித்துக் கொண்டே நடையை கட்டினார் செங்கோட்டையன்.