பாமக துணைத் தலைவராக இருந்த நடிகர் ரஞ்சித் அக்கட்சியில் இருந்து நேற்று விலகுவதாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று டிடிவி தினகரனை சந்தித்து அமமுகவில் இணைந்தார்.
இதுகுறித்து அவர், ''தன்னம்பிக்கை, ஆளுமை, தைரியம் உள்ள ஒரே தலைவர் தினகரன்தான். ஜாதி மதத்திற்கு அப்பாற்பட்டு எல்லோராலும் விரும்பப்படுபவர் தினகரன். வாக்கு வாழ்க்கையையே மாற்றும், அந்த வாக்குகள் அமமுகவுக்கு கிடைக்க கடுமையாக உழைப்பேன். கூட்டணி, பேரம் பேசுதல் எந்த விதத்திலும் கொள்கையை விட்டுக்கொடுக்காதவர் தினகரன்'' என்றார்.
பின்னர் பேசிய தினகரன், ''ஜாதி மதற்ற தலைவர் என்ற ரஞ்சித்தின் கூற்றை உண்மையாக்கும் விதத்தில் நடந்து கொண்டிருக்கிறோம். புதுச்சேரி நாடாளுமன்றத் தேர்தலில் அமமுகதான் போட்டியிடுகிறது. காவல்துறை அனுமதி அளித்த இடங்களில்தான் மக்களை சந்திக்கிறோம். வேண்டுமென்றே வழக்கு போடுகின்றனர். திமுக - காங்கிரஸ் கூட்டணியை பலமான கூட்டணியாக மக்கள் பார்க்கவில்லை. ஈழப்பிரச்சனை, மீத்தேன் பிரச்சனைகளுக்கு காரணமாக இருந்தது திமுக - காங்கிரஸ் கூட்டணி ஆட்சிதான். பாமக, தேமுதிக இரண்டு கட்சிகளுமே ஜெயலலிதாவுக்கு எதிராக பேசிய கட்சிகள்தான். அவர்களுடன் அமமுக எப்படி கூட்டணி வைக்க முடியும்?'' என்றார்.