
ப.பாண்டி, ராயன் படங்களுக்கு பிறகு தனுஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மற்றொரு திரைப்படம் இந்த ‘நிலவுக்கு என்மேல் என்னடி போபம்’. இதுவரை தான் இயக்கிய படங்களில் நாயகனாக நடித்து வந்த தனுஷ் இந்த முறை முழுக்க முழுக்க வெறும் இயக்குநராக மட்டுமே இந்த படத்தை உருவாக்கி இருக்கிறார். இதனாலேயே இந்த படத்திற்கு மிகுந்த எதிர்பார்ப்பு நிலவி வருகிறது. அதேபோல் முழுக்க முழுக்க இளைஞர்களை மையப்படுத்தி முழு நீள காதல் படமாக இப்படத்தை உருவாக்கி இருப்பதாலும் இப்படத்திற்கு மேலும் எதிர்பார்ப்பு கூடியிருக்கிறது. இப்படி பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே வெளியாகியிருக்கும் இந்த நிலவுக்கு என்மேல் என்னடி கோபம் திரைப்படம் ரசிகர்களை கவர்ந்ததா, இல்லையா?
காதல் தோல்வியில் இருக்கும் நாயகன் பவிஷ் நாராயணனை அவரது பெற்றோர் சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைக்க பெண் பார்க்க கூட்டி செல்கின்றனர். போன இடத்தில் பவிஷ் நாராயணனின் பள்ளி தோழியான பிரியா பிரகாஷ் வாரியர் திருமண பெண்ணாக வந்து நிற்பது பவிஷுக்கு அதிர்ச்சி கலந்த சந்தோஷத்தை கொடுக்கிறது. இருவரும் திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். இருந்தும் திருமணத்திற்கு முன் பவிஷ் வாழ்வில் நடந்த காதல் தோல்வியை பற்றி பிரியா வாரியர் தெரிந்துகொள்ள நினைக்கிறார். பவிஷ், அனிகா உடனான காதல் கதையை பிரியாவிடம் சொல்கிறார்.

இதைத் தொடர்ந்து காதல் தோல்விக்கு பிறகு வேறு ஒருவரை திருமணம் செய்து கொள்ள தயாராக இருக்கும் அனிகா-வை அவரது திருமணத்திற்கு போய் சந்திக்க மீண்டும் ஒரு வாய்ப்பை பிரியா பவிஷுக்கு ஏற்படுத்திக் கொடுக்கிறார். பவிஷ் மீண்டும் சிங்கிளாக திரும்பி வந்தால் தன்னுடன் திருமணம், இல்லையேல் அனிகாவுடன் ஜோடியாக வரவேண்டும் என கூறி பவிஷ் நாராயணனை அனிகா திருமணத்திற்கு அனுப்பி வைக்கிறார். பவிஷ் நாராயணனும் அனிகா-வை மீண்டும் கரம் பிடிக்க அவரது திருமணத்திற்கு செல்கிறார். போன இடத்தில் என்ன நடந்தது? பவிஷ்நாராயணன் காதல் ஜெயித்ததா, இல்லையா? பிரியா வாரியரின் நிலை என்னவானது? என்பதே நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் படத்தின் மீதி கதை.
மிகவும் யூசுவலான ஒரு காதல் கதையை எடுத்துக் கொண்டு அதனுள் இக்கால 2கே கிட்ஸ்களின் வாழ்க்கை அமைப்புகளை உள்ளடக்கி ஒரு ஹைடெக் காண லவ் ஸ்டோரியை பழைய கதையில் புதிய சாயம் பூசி கொடுத்திருக்கிறார் இயக்குநர் தனுஷ். இந்த பழைய கதையை வைத்துக்கொண்டு இந்த கால 2கே கிட்ஸ்களின் ட்ரெண்டுக்கு ஏற்ப புதுவிதமான காட்சி அமைப்புகளுடன் கூடிய திரைக்கதை அமைத்து முழு காதல் படமாகவும் இல்லாமல், அதே சமயம் முழு காமெடி படமாகவும் இல்லாமல் இரண்டுக்கும் நடுவே ஒரு படமாக இப்படத்தை கொடுத்து பார்ப்பவர்களுக்கு பிடிப்பது போலவும் பிடிக்காதது போலவும் ஆன ஒரு படத்தை கொடுத்திருக்கிறார்கள். காமெடி காட்சிகள் ஜனரஞ்சனமாகவும், காதல் காட்சிகளும் உணர்வுபூர்வமாகவும் உருவாக்கிய இயக்குநர் தனுஷ் அதை ஒரு சேர கதம்பமாக கொடுத்து ரசிக்க வைக்க சற்றே தடுமாறி இருக்கிறார்.

படத்தில் காட்டப்படும் காட்சி அமைப்புகள் நாம் அன்றாடம் வாழும் வாழ்க்கைக்கு ஒட்டாதபடி இருப்பதும், அதில் நடக்கும் சம்பவங்கள் அரத பழசான சம்பவங்களாக இருப்பதும் பார்ப்பதற்கு அயற்சி ஏற்படுத்துவது போல் இருக்கிறது. அதே போல் திரை கதையிலும் பெரிதாக எங்கும் விருப்பமில்லாமல் ஒரே நேர்கோட்டில் பயணித்து இருப்பதும் சற்றே மைனஸ். இருந்தாலும் காதல் காட்சிகள் மற்றும் நட்பு சம்பந்தப்பட்ட காமெடி காட்சிகள் அனைத்தும் ரசிக்கும் படியே அமைந்திருப்பது மைனஸை மறக்கடிக்க செய்து ரசிக்க வைக்க முயற்சி செய்திருக்கிறது. குறிப்பாக குடும்பம் சம்பந்தப்பட்ட காட்சிகளில் சரண்யா பொன்வண்ணன் ஸ்கோர் செய்கிறார். அதேபோல் நாயகனுக்கு நண்பராக வரும் மேத்யூ தாமஸ் காமெடி காட்சிகளில் அதகளம் செய்து பார்ப்பவர்களை கலகலப்பூட்டி இருக்கிறார். குறிப்பாக இரண்டாம் பாதி முழுவதையும் இவரே தன் தலை மேல் போட்டுக்கொண்டு படத்தை சிங்கிளாக ரசிக்க வைக்க உதவியிருக்கிறார். குறிப்பாக முதல் பாதியை காட்டிலும் இரண்டாம் பாதி சற்றே வேகம் எடுத்து சிறப்பான விறுவிறுப்பான திரைகதையால் ரசிகர்களை சீட்டில் அமர வைத்து இந்த கால 2கே கிட்ஸ் ரசிகர்களுக்கு ஏற்ற ஒரு கலகல காதல் படமாக இந்தப்படம் அமைந்திருக்கிறது.
நாயகன் பவிஷ் நாராயணன் அப்படியே சிறுவயது தனுசை நம் கண் முன் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார். அவரது நடை உடை பாவனை நடிப்பு வசனம் குரல் என அனைத்துமே அப்படியே தனுஷ் போல் இருக்கிறது. சிறிது நேரம் கண்ணை மூடிக்கொண்டு படத்தை கவனித்தால் தனுஷ் நடிப்பது போன்ற ஒரு உணர்வை அவர் கொடுத்து விடுகிறார். அவரது மாமா தனுஷ் ஆவி பவிஷுக்குள் புகுந்து கொண்டது போல் நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். எந்தெந்த காட்சிகளுக்கு எவ்வளவு எமோஷனல் தேவையோ அதை சிறப்பாக கொடுத்து நடிப்பில் கவனம் பெற்று இருக்கிறார். இவரது நண்பராக வரும் மேத்யூ தாமஸ் இப்படி ஒரு ஆங்கிளில் இவரை யாரும் எதிர்பார்த்து இருக்க மாட்டார்கள். காமெடி காட்சிகளில் சிறப்பான பங்களிப்பை கொடுத்து படத்தை தூக்கி நிறுத்தி இருக்கிறார். அதேபோல் நட்பு சம்பந்தப்பட்ட காட்சிகளிலும் சிறப்பாக நடித்து பாஸ் மார்க் வாங்கி இருக்கிறார்.

நாயகிகள் அனிகா சுரேந்தர் தனக்கு என்ன வருமோ அந்த நடிப்பை சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார். காதல் காட்சிகளில் இவரது ஆத்மார்த்தமான நடிப்பு சிறப்பாக அமைந்திருக்கிறது. பிரியா பிரகாஷ் வாரியர் முதிர்ச்சியான கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். நாயகனுக்கும் இவருக்குமான கெமிஸ்ட்ரி நன்றாக வொர்க் அவுட் ஆகி இருக்கிறது. அதேபோல் இவர்களின் நண்பர்களாக வரும் காதல் ஜோடி மற்றும் பிற்பாதியில் வரும் அஞ்சலி கதாபாத்திரம் ஆகியோர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி காட்சிகளுக்கு புத்துயிர் கொடுத்துருக்கின்றனர். இவர்களின் பங்களிப்பு படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறது. சரண்யா பொன்வண்ணன் மற்றும் ஆடுகளம் நரேன் ஆகியோரின் சின்ன சின்ன கேமியோக்கள் சிறப்பாக அமைந்திருக்கின்றன. சிறிது நேரமே வந்தாலும் சரத்குமார் மனதில் பதிகிறார்.
ஜி.வி. பிரகாஷ் இசையில் ‘கோல்டன் ஸ்பேரோ’ பாடல் ஏற்கனவே இளைஞர்களின் இதயத்துக்குள் ஊடுருவி ஹிட் அடித்துள்ளது. அதேபோல் மற்ற பாடல்களும் இக்கால இளைஞர்களை மையப்படுத்தி உருவாக்கி இருப்பதால் அவர்களுக்கு ஏற்றவாறு சிறப்பாக அமைந்திருக்கிறது. காதல் மற்றும் உணர்ச்சி பொங்கும் படியான காட்சிகளில் வழக்கம் போல் சிறப்பான இசையை அழகாக கொடுத்து காட்சிகளுக்கு உயிர் ஊட்டி இருக்கிறார். கதைக்கும் படத்துக்கும் எந்த அளவு இசை தேவையோ அதை சிறப்பாக கோர்வையாக கொடுத்திருக்கிறார். லியோன் பிரிட்டோ ஒளிப்பதிவில் காட்சிகள் மிக மிக கலர்ஃபுல்லாக அதேசமயம் மிகவும் ரிச்சாக தெரிகிறது. இவரது பிரெஷ்ஷான காட்சி அமைப்புகள் படத்துக்கு ரெப்ரஷிங்கான தோற்றத்தை கொடுத்து இருக்கிறது.
இந்த கால ஜென் ஜி கிட்ஸ் காதல் கதையாக விரிகின்ற இத்திரைப்படத்தில் கதை பழசாகவும் கதை சொன்ன விதம் பலவிதமான ஸ்டீரியோ டைப்புகளை உடைத்து புதுவிதமாகவும் கொடுத்திருப்பது இரண்டு விதமான உணர்வுகளை ஒருசேர பார்ப்பவர்களுக்கு கடத்தி இருக்கிறது. இந்தப் படத்தை இளைஞர்கள் எப்படி வரவேற்கிறார்கள் என்பதை பொறுத்தே இப்படத்தின் வெற்றி நிர்ணயிக்கப்படும்.
‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ - சற்று தேய்பிறை!