
முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு, இபிஸ் மற்றும் ஓபிஸ் ஆகியோர் இரட்டை தலைமையில் அ.தி.மு.கவை வழிநடத்தி வந்தனர். அதன் பின்னர், நடந்த 2021ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்குப் பிறகு, அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக ஏற்பட்ட குழப்பத்தில் அ.தி.மு.கவில் இருந்து ஓ.பன்னீர் செல்வம் நீக்கப்பட்டார். தற்போது ஓ.பன்னீர்செல்வம், அதிமுக தொண்டர்கள் உரிமை மீட்புக் குழு ஒன்றை நடத்தி அரசியலில் ஈடுபட்டு வருகிறார்.
இந்த சூழ்நிலையில், வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்காக அனைவரும் ஒன்றிணைந்து அதிமுக கட்சியை வழிநடத்த வேண்டும் என்று ஒபிஎஸ் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். ஆனால், அதிமுக முன்னாள் அமைச்சர்களான ஆர்.பி.உதயகுமார், ஜெயக்குமார் போன்றவர்கள் ஒபிஎஸ்ஸை தொடர்ந்து விமர்சித்து வருகின்றனர். இந்த சூழலில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது தொண்டர்களுக்கு கடிதம் ஒன்று நேற்று எழுதியிருந்தார்.
அதில், ‘இன்றைக்கு, அதிமுக கொள்கை வீரர்களின் கூடாரமாகத் திகழ்கிறது. பதவிக்காகவும், பணம் சேர்ப்பதற்காகவும் கட்சியை காட்டிக் கொடுக்கத் தயாராகி இருந்த திரைமறைவு அரசியல் பேராசைக்காரர்களின் கனவுகளும், கற்பனைகளும் காகித ஓடம் போல் கால வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்டுவிட்டன. ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருக்க முடியுமா?. களைகளும், பயிர்களும் ஒன்றாக வளர்ந்து வெள்ளாமை ஆகுமா?. விசுவாசியும், துரோகியும் தோளோடு தோள் நிற்க முடியுமா?. முடியாது, முடியாது என்று நீங்கள் முழங்குவது கேட்கிறது’ என்று தெரிவித்தார். ஓநாயும், வெள்ளாடும் ஒன்றுபட்டு இருகக் முடியுமா? என்று இபிஎஸ் குறிப்பிட்டது ஓபிஎஸ்ஸை தான் விமர்சகர்கள் கூறி வந்தனர்.
இந்த நிலையில், மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 77வது பிறந்தநாள் விழா இன்று (24-02-25) தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த விழாவை முன்னிட்டு, அதிமுக தலைவர்கள், ஜெயலலிதாவின் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர். அந்த வகையில், சென்னை காமராஜர் சாலையில் உயர்கல்வி மன்ற வளாகத்தில் உள்ள ஜெயலலிதாவின் சிலைக்கு ஓ.பன்னீர்செல்வம் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினார். இதனையடுத்து, அவர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசினார்.
அப்போது அவர், “ஜெயலலிதா இருந்தவரை கட்சியை எந்தளவுக்கு நிலைநிறுத்தினார் என்பது எல்லோருக்கும் தெரியும். அதற்கு பின்னால் நடைபெற்ற அரசியல், சூது, சூழ்ச்சி, நம்பிக்கை துரோகம் இதெல்லாம் யாரால் அரங்கேற்றப்பட்டது என்பதும் எல்லோருக்கும் இது. இதனால், நடைபெற்ற 11 தேர்தல்களிலும் தோல்வியை தான் சந்தித்தது. இதற்கு எல்லாம் காரணம், ஒற்ற தலைமை தான் வேண்டும் என்று அடம்பிடித்து அதை ஏற்றுக்கொண்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். தமிழக மக்கள் விரும்புவது இரு மொழிக் கொள்கை தான். ஜெயலலிதா அதை தீர்மானமாக சட்டமன்றத்தில் நிறைவேற்றினார். எங்களுடைய நிலைப்பாடும் இருமொழிக் கொள்கை தான். மாநில நிதியாக இருந்தாலும் சரி, மத்திய நிதியாக இருந்தாலும் சரி அது மக்களுடைய வரிப் பணம். தொண்டர்களுடைய விருப்பம் கட்சி இணைய வேண்டும் என்பது தான். தொண்டர்களின் எண்ணம் ஈடேற வேண்டும் என்பதற்காக தான் நாங்களும் தர்ம யுத்தத்தை நடத்திக் கொண்டிருக்கிறோம்” என்று கூறினார்.