Skip to main content

“எண்ணி மனம் வருந்துகிறேன்...” - நா.த.கவில் இருந்து விலகிய காளியம்மாள்!

Published on 24/02/2025 | Edited on 24/02/2025

 

Kaliammal deviation from naam tamilar katchi party

அண்மைக் காலமாக நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்த நிர்வாகிகள் தொண்டர்கள் என பலரும் கட்சியில் இருந்து விலகி வருகின்றனர். இதற்கு பல்வேறு காரணங்களைச் சொல்லி அவர்கள் அக்கட்சியில் இருந்து விலகி வந்தனர். சில தினங்களுக்கு முன்பு, 3,000 நா.த.க உறுப்பினர்கள் அக்கட்சியில் இருந்து விலகி முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுகவில் இணைந்தனர். இது நாம் தமிழர் கட்சிக்கு பெரும் சரிவை ஏற்படுத்தியதாகக் கூறப்பட்டது. அதனை தொடர்ந்து நட்சத்திர பேச்சாளரும், நாம் தமிழர் கட்சியின் மகளிர் பாசறை மாநில ஒருங்கிணைப்பாளருமான காளியம்மாள் அக்கட்சியில் இருந்து விலகவுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது.

இந்த தகவல் குறித்து சீமான் பேசிய போது, “அது தெரியவில்லை. இந்த கட்சிக்குள் முழு சுதந்திரம் இருக்கிறது. இருந்து இயங்குவதற்கும், விருப்பம் இல்லையென்றால் விலகி செல்வதற்கும் முழு சுதந்திரம் இருக்கிறது. இது ஒரு ஜனநாயக அமைப்பு. அவர் முதலில் சமூக செயற்பாட்டாளராக தான் இருந்தார். அவரை அழைத்து வந்தது நான் தான். தங்கச்சிக்கு முழு சுதந்திரம் இருக்கிறது. கட்சியில் இருக்கிறதா? அல்லது வேறு கட்சியில் இணைந்து செயல்படுவதா? என்ற முடிவெடுக்கும் உரிமை அவருக்கு இருக்கிறது” என்று கூறியிருந்தார்.

இந்த நிலையில், நாம் தமிழர் கட்சியில் விலகவுள்ளதாக காளியம்மாள் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். இது குறித்து காளியம்மாள் வெளியிட்ட அறிக்கையில், ‘இதுவரை இல்லாத கனத்த இதயத்தோடு எழுதுகிறேன். கட்சியில் பயணித்த ஒவ்வொரு கணமும் உண்மையும் நேர்மையுமாய் உளப்பூர்வமாக என் குடும்பத்திற்கும் மேலாக நேசித்து வந்தேன். இந்த 6 ஆண்டுகால பயணம் எனக்கு அரசியல் ரீதியான பல அனுபவங்களை கொடுத்துள்ளது. பல உறவுகள் அக்கா, தங்கையாகவும் அண்ணன், தம்பிகளாகவும் கிடைத்ததையும் அவர்கள் என்னுடன் பழகிய விதங்களையும் எண்ணி மகிழ்கிறேன். நமக்கெல்லாம் ஒரே பெருங்கனவு தான். அது தமிழ்த்தேசியத்தின் வெற்றியும், அதனை மக்களிடம் கொண்டு சேர்த்தல் என்னும் உன்னத நோக்கமும். அந்த நோக்கத்தை அடைய வேண்டும் என்ற பாதையில் நானும் ஒரு பகுதியாய் இணைந்து பயணித்ததில் நான் பெருமை கொள்கிறேன். 

ஆனால் இப்பாதை இவ்வளவு சீக்கிரம் முடியும் என நான் கனவிலும் நினைக்கவில்லை. கடந்த 6 வருடகாலமாக ஒரு சமூக மாற்றத்திற்காக ஒரு பெண்ணாக இருந்து எவ்வளவு போராட முடியுமோ, என் ஆற்றலையும் மீறி உங்கள் எல்லோர் அன்பாலும், நம்பிக்கையாலும் இந்த களத்தில் நின்றிருக்கிறேன். எனினும் காலத்தின் சூழல், உயிராக எண்ணி வழிநடந்த நாம் தமிழர் கட்சி எனும் இந்த பாதை இத்துடன் முடித்து வைக்கப்படுகிறது என்பதை மிகவும் வருத்தத்துடன், கனத்த இதயத்துடனும் தெரிவித்துக்கொள்கிறேன். இங்கு பயணித்ததில் பலரின் அன்பு அக்கறை, நம்பிக்கை என்மீதான அளவற்ற பாசம் என்ற அனைத்தையும் மனதில் நிலைநிறுத்தியுள்ளேன். என்னுடன் இத்தனை நாட்களாக உண்மையாய் உறவாய் பழகிய, பயணித்த களத்தில் இன உணர்வோடு நின்று நேர்மையாய் வேலை செய்த அத்தனை உறவுகளுக்கும். உண்மையான உழைப்பாளர்களுக்கும் உலகத்தமிழர்கள் மற்றும் நாம்தமிழர் உறவுகளுக்கும் நன்றிகளை சொல்வதோடு என் வருத்தங்களையும் பகிர்ந்துகொள்கிறேன்.

ஒரு சாமானிய குடும்பத்தில் பிறந்து பிறந்த இனத்துக்காக தமிழ்த்தேசிய களத்தில் ஓடிய என்மீது மிகுந்த நம்பிக்கையும் அன்பும் வைத்து களமாடிய உங்கள் அத்துணை பேருக்கும் என்னுடைய சிரம் தாழ்ந்த நன்றிகள் எனக்கான நெருக்கடிகள் நிறைய வந்த போதும் என்மீது நீங்கள் கொண்டுள்ள நம்பிக்கையாலும், நான் உங்கள் மீது கொண்ட அன்பினாலும், எந்த முடிவும் எடுக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால், இப்படி ஒரு முடிவை எடுக்க வேண்டிய சூழல் வந்துவிட்டதை எண்ணி மனம் வருந்துகிறேன் அவதூறு வெறும் வார்த்தைகள் தானே என்று நினைத்து அள்ளி தெளிப்பவர்களுக்கு மத்தியில் என் மீது அளப்பரிய அன்பு கொண்டு நேசிக்கிற உங்கள் அத்தனை பேருக்கும் நான் என்றென்றும் கடமை பட்டவளாக இருப்பேன். என்னுடைய இந்த முடிவு பலருக்கு வருத்தத்தைத் தரலாம்.எனக்கும் தான். காலத்தின் வழிநடத்தல்! என்றும் தமிழ்த்தேசியத்தை விதைக்கும் வழியில் எம் பயணம் தொடரும்.... நன்றி,வணக்கம், நாம் தமிழர்!;’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

சார்ந்த செய்திகள்